'கேப்டன்' விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமாமானர். விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.

இந்த குருபூஜையில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அதிகாலை முதலே தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு மரியாதை செலுத்தினார்கள். மேலும் கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும், அரசியல் தலைவர்களும் கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தினர்கள்.

அரசியல் தலைவர்கள் மரியாதை

அந்த வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை செளந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.