- Home
- Tamil Nadu News
- சான்ஸே இல்ல தம்பி.. விஜயகாந்த் போல முடிவு எடுக்க மாட்டேன்! கெத்து காட்டும் சீமான்!
சான்ஸே இல்ல தம்பி.. விஜயகாந்த் போல முடிவு எடுக்க மாட்டேன்! கெத்து காட்டும் சீமான்!
நாம் தமிழர் கட்சி இனி எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜயகாந்த் கூட்டணி அமைத்துச் செய்த தவறை நான் செய்யப்போவதில்லை என்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கூட்டணி பற்றி சீமான் கருத்து
அ.தி.மு.க., தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சென்ற நடிகர் விஜயகாந்த் செய்த அரசியல் முடிவை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிச்சயமாக எடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், இனிவரும் எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசினார்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி
"கூட்டணிக்காகக் காத்திருக்காமல், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். களத்தை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் தொடர்ந்து செயல்பட உள்ளோம்," என்று சீமான் தெரிவித்தார்.
"வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பணம் வாங்காமல் 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 60 லட்சமாக உயர்ந்து, ஒரு கோடி வாக்குகளை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்.
மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படும் என்றும், அவசரம் காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். "நான் தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன். அது மெதுவாகத்தான் வேலை செய்யும்," என்று அவர் உதாரணம் மூலம் விளக்கினார்.
விஜயகாந்திடம் கற்றுக்கொண்ட பாடம்
கூட்டணி குறித்துப் பேசிய சீமான், நடிகர் விஜயகாந்தின் அரசியல் முடிவைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
"கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு, பிறகு அந்தக் கட்சிகளோடேயே கூட்டணி அமைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
"தனித்து நின்று 10 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த், கூட்டணி அமைத்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகுதான் அவரது வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே, எந்தத் தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது," என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்
தனித்து நின்று நிச்சயம் வலிமை பெறுவோம் என்றும், ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சீமான் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. சீமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் வந்திருந்த நிர்வாகிகளுடன் சீமான் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.