ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! மீண்டும் வெளியே வரும் ஏ2 ரவுடி உள்பட 3 பேர்!
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சிறையில் இறந்ததை அடுத்து, அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு சென்னை நீதிமன்றம் மீண்டும் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடிகள் வழக்கறிஞர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும், ஏ2 குற்றவாளியாக அவரது மகன் அஸ்வந்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
ரவுடி நாகேந்திரன் மரணம்
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். இதனால், அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், இடைக்கால ஜாமின் முடிந்ததை அடுத்து நேற்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் சரணடைந்த அஸ்வத்தாமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அஸ்வத்தாமன்
இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மரணத்தை தொடர்ந்து, அதன் பிறகு நடக்க உள்ள காரியங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் தனக்கு 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அக்டோபர் 28ம் தேதி வரைக்கும் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ரவுடி அஸ்வத்தாமனுக்கு ஜாமீன்
அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வரும் சதீஷ் மற்றும் ஹரிஹரனுக்கும் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ2 குற்றவாளி அஸ்வத்தாமன் ஜாமீனில் வௌியே வந்துள்ள நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சதீஷ் மற்றும் ஹரிஹரனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.