- Home
- Tamil Nadu News
- ஆசிரியர்களே ஆகஸ்ட் 3ம் தேதி வரை தான் டைம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர்களே ஆகஸ்ட் 3ம் தேதி வரை தான் டைம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 386 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, இதில் ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்பது, ஆசிரியர் தினத்தையொட்டி (செப்டம்பர் 5) சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது ஆகும். இது 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை
இந்நிலையில் நடப்பாண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். நடப்பாண்டு (2025-26) 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாநில தேர்வுக்குழு
அதிலிருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதையடுத்து விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர். அதன்பின் மாவட்ட தேர்வுக் குழுவினர் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேசிய விருது பெற்றவர்களின் பெயர்களை பரிந்துரைக்ககூடாது
அவற்றை ஆராய்ந்து மாநில தேர்வுக்குழு இறுதிப்பட்டியலை தயாரிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். இதுதவிர அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்களை பரிந்துரைக்ககூடாது. அதேபோல், வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல் போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.