அவசரப்பட்டுட்டீங்களே! எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி! சொல்வது யார் தெரியுமா?
ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ராமதாஸை உதாசினப்படுத்தி எடப்பாடி பழனிசாமியைப் போல பொதுக்குழு உறுப்பினர்கள் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நிரூபிக்க அன்புமணி முயல்வது தவறு.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தான். இதனால் பாமக இரண்டாக உடைந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் சீனியர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸை உதாசினப்படுத்தி எடப்பாடி பழனிசாமியை போலவே பொதுக்குழு உறுப்பினர்கள் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முயல்வது தவறான முன்னுதாரணம் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
பாமகவின் வாக்கு வங்கி
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கட்சியில் பொதுக்குழு & செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள், தேர்தல் ஆணையத்தில் சின்னமும், கட்சியும் எனக்கு தான் என்று பெற்றுக்கொள்ளலாம், ஆனால் #பாட்டாளி_மக்கள்_கட்சி யின் நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் தான் பாமகவின் வாக்கு வங்கி உள்ளது.
கே.சி.பழனிசாமி
அன்புமணி இந்த சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் அவர்களை அனுசரித்து அரசியல் பயணம் செய்திருந்தால், கட்சி சிதறாமல் அவர் வசம் முழுமையாக வந்திருக்கும். இந்த சமயத்தில் ராமதாஸ் அவர்களை உதாசினப்படுத்தி எடப்பாடி பழனிசாமியை போலவே பொதுக்குழு உறுப்பினர்கள் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முயல்வது தவறான முன்னுதாரணம்.
அன்புமணியும் வீழ்ச்சியை தான் சந்திப்பார்
இதனால் 5%க்கு மேல் இருந்த வாக்கு வங்கி 2%க்கு கீழ் வந்துவிடும். இதன்மூலம் கட்சியின் கட்டமைப்பு மட்டும் தான் அன்புமணியிடம் இருக்கும், கட்சியின் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பலமாக சேதாரமடையும். இதன் மூலம் அன்புமணியும் வீழ்ச்சியை தான் சந்திப்பார்.
கூட்டணியையும் பலவீனப்படுத்திவிட்டார்
பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவும், "காலை பிடித்துக்கொண்டு கொள்ளி வைக்க வேண்டும் என்று கதறி அழுதார்" என்கிற ராமதாஸ் அவர்களின் நேற்றைய குற்றச்சாட்டும் #NDA கூட்டணிக்கும் பலவீனமாக தான் அமையும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு NDA கூட்டணிக்கு பெரும் பலம் சேர்க்க வேண்டிய ஒரு கட்சியை, தன் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகள் மூலம் தன்னையும், கட்சியையும் பலவீனப்படுத்திக் கொண்டு, கூட்டணியையும் பலவீனப்படுத்திவிட்டார் அன்புமணி என கூறியுள்ளார்.