தம்பிக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் ஸ்டாலினை பார்க்க ஓடி வந்த அழகிரி
மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த மோதல் சமீபத்தில் குறைந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரிக்க அழகிரி நேரில் மருத்துவமனைக்குச் சென்றார்.

திமுகவில் வாரிசு மோதல்
அரசியல் என்று இருந்தாலே மோதல் இல்லாமல் இல்லை. அதிலும் அதிகாரம் மோதல்கள் தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் திமுகவில் உட்கட்சி மோதலானது பெரிய அளவில் ஏற்பட்டது கடந்த 2006- 2011 ஆம் ஆண்டில் தான். அப்போது கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது தொடங்கிய மோதல் பல ஆண்டுகள் நீடித்தது. ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி திமுகவிற்கு எதிராக ஒரு கட்சியை தொடங்கவே திட்டமிட்டார் இதற்காக தனது ஆதரவாளர்களின் திரட்டி கூட்டங்களையும் நடத்தினார். ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களையும் வெளிப்படையாகவே அழகிரி கூறி வந்தார்.
ஸ்டாலின்- அழகிரி மோதல்
கலைஞர் கருணாநிதி 2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் அவரது இறுதி சடங்கின் பொழுது ஸ்டாலினும் அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர் ஆனால் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. இப்படி இருவரும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் தான் குடும்பத்தினர் இருவருக்கும் இடையே சமாதான பேச்சில் ஈடுபட்டதையடுத்து உரிய பலன் கிடைத்தது. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார்.
முதல்வருக்கு உடல்நிலை பாதிப்பு
அடுத்ததாக மதுரை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அழகிரி வீட்டிற்க்கும் நேரடியாக சென்றார். எனவே அண்ணன்- தம்பி இடையே இருந்து வந்த மோதல் குறைந்து சமாதானம் ஏற்பட்டது. கடந்த வாரம் மு க முத்து மறைவிற்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடை பயிற்ச்சியின் போது ஏற்பட்ட லேசான தலை சுற்றலையடுத்து அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினை மூன்று நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பிரதமர் மோடி முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நிலை தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
ஸ்டாலினை பார்க்க வந்த அழகிரி
இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினை உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக அவரது சகோதரர் மு.க அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரடியாக வந்தார். இதே போல முதலமைச்சர் ஸ்டாலினின் உறவினர்கள்.
மூத்த அமைச்சர்கள் நேரில் வந்து முதலமைச்சர் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்கள். அதே நேரம் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துமனையில் இருந்து அரசு திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முன்னேற்றங்கள் குறித்தும் தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது

