- Home
- Tamil Nadu News
- இப்படியே போச்சுனா முழு நிலவு அமாவாசை ஆகிவிடும்! இபிஎஸ் மகன் மருமகன் கட்டுப்பாட்டில் அதிமுக! செங்கோட்டையன் பகீர்!
இப்படியே போச்சுனா முழு நிலவு அமாவாசை ஆகிவிடும்! இபிஎஸ் மகன் மருமகன் கட்டுப்பாட்டில் அதிமுக! செங்கோட்டையன் பகீர்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது குடும்ப ஆட்சி, உழைத்தவர்களை புறக்கணித்தல் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தன்னைச் சுற்றி இருப்பவர்களை பலவீனப்படுத்துவதால், அதிமுக முழு நிலவில் இருந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: நாமக்கலில் தவெக கொடி பறந்த போது பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள் என்று இபிஎஸ் பேசினார். ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலேயே சுயமாக நடக்க வேண்டும் பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது.
அதிமுகவில் குடும்ப ஆட்சி
பாஜக என்னை அழைத்து அதிமுக-பாஜக இணைய வேண்டும் என கூறியது நானும் அதையே தான் கூறினேன். என்னை அழைத்து அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பாஜக பேசியது என்றார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை. அதிமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அதிமுகவின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப அரசியல் குறித்து முன்னரே பேசியிருந்தால், அப்போதே கட்சியில் இருந்து நீக்கியிருப்பார்கள்.
அதிமுகவை பாதுகாத்த பாஜக
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி. அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச்செயலாளர் அவர்களை கழகத்தின் அனைத்து பணிகளில் இருந்து விலக்கினார்கள். 2012ல் என்னையும் கழகப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்து சென்ற வரலாறு இருக்கிறது. தற்போது அது போன்ற சூழல் இல்லை. என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்
45 வயதுக்கு உட்பட்டோர் மட்டும்தான் பூத் கமிட்டியில் இருக்க வேண்டும் என்றால், இபிஎஸ் உழைத்தவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் இபிஎஸ் என்னிடம் பேசி இருப்பார், தன்னை சுற்றி இருப்பவர்களை பலவீனம் அடைய செய்யும்போது அவர்களும் பலவீனம் அடைகிறார்கள். நிர்வாகிகளை நீக்கிக் கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும் என்றும் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.