- Home
- Tamil Nadu News
- அனைத்து மீனவர்களுக்கும் ரூ. 8000 உதவித்தொகை.! வங்கி கணக்கில் உடனடியாக கிரெடிட் - ஏன் தெரியுமா.?
அனைத்து மீனவர்களுக்கும் ரூ. 8000 உதவித்தொகை.! வங்கி கணக்கில் உடனடியாக கிரெடிட் - ஏன் தெரியுமா.?
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டீசல் மானியம், இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்ய ஏதுவாக ரூ.360 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், ரூ.216.73 கோடியில் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் என மொத்தம் ரூ.576.73 கோடியில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இது மட்டுமில்லாமல் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடல்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே இந்த காலத்தில் மீனவர்களுக்கு வாழ்வாதாரங்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களுக்கு தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 18.08.2023 அன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது ரூ.5,000-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது
நடப்பாண்டின் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 இலட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.8,000 வீதம் வழங்கிடும் பொருட்டு, அரசு ரூ.140.07 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்திடும் முகமாக சென்னை. நந்தனத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்கள்.