பரந்தூர் முதல் ஆணவக் கொலை வரை! தவெக மாநாட்டில் 6 மாஸ் தீர்மானங்கள்!
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம், தேர்தல் நேர்மை, சட்டம் ஒழுங்கு, மீனவர் பிரச்சினை, ஆணவக் கொலைகள், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவெக மதுரை மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பது குறித்து பேசினார். மேலும், கட்சியின் திட்டங்கள் மற்றும் எதிர்காலப் பாதை குறித்தும் விரிவாக விளக்கினார்.
ஆறு முக்கியத் தீர்மானங்கள்
இந்த மாநாட்டில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
1. பரந்தூர் விமான நிலையம்: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என தவெக வலியுறுத்தியது.
2. தேர்தல் நேர்மை: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மீனவர் பிரச்சினை
3. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற தன்மையை விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆணவக் கொலைகள், அரசு வேலைவாய்ப்பு
5. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. அரசு காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள், தவெக-வின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைப்பதாகவும், வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சியின் செயல்திட்டத்தை பிரதிபலிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.