- Home
- Tamil Nadu News
- சென்னை
- முதல்வர் ஸ்டாலின் விழாவில் தவெக கொடி, விஜய் படத்தை காண்பித்த மாணவர்கள்! விசாரணை!
முதல்வர் ஸ்டாலின் விழாவில் தவெக கொடி, விஜய் படத்தை காண்பித்த மாணவர்கள்! விசாரணை!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தவெக கொடி, விஜய் புகைப்படத்தை காண்பித்த மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tamil Nadu Students Displayed TVK Flag and Vijay's Photo At Function Attended By MK Stalin
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம்- சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கு தொடங்கியது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த விழாவில அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், எம்.பி.க்கள், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தவெக கொடி, விஜய் படத்தை காண்பித்த மாணவர்கள்
இந்த விழாவில் ஏராளமான கல்லுரி மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது நடுவரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களில் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த தவெக கொடியையும், நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் புகைப்படத்தையும் உயர்த்தி காண்பித்ததால் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பார்த்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அந்த மாணவர்களை உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றினார்கள்.
மாணவர்களிடம் விசாரணை
இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நியூ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் தவெகவில் மூன்று மாதங்களுக்கு முன்பு அடிப்படை உறுப்பினராக இணைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு நடந்துள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதல்வர் விழாவில் பாதுகாப்பு குறைபாடு?
பொதுவாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாக்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பலத்த சோதனைக்கு பின்னரே விழாவில் கலந்து கொள்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இன்றும் கலைவாணர் அரங்கில் விழா தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் அவர்கள் தவெக கொடி, விஜய் படத்தை எப்படி எடுத்துச் சென்றனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கண்டிக்க வேண்டும்
அண்மை காலமாக பல்வேறு விழாக்களிலும் கல்லுரி மாணவர்கள் தவெக தலைவர் விஜய் படத்தை காண்பிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்ற விழாக்களிலும் இவ்வாறு செய்துள்ளனர்.
நடிகர் விஜய்யை பின்பற்றுபவர்களில் கல்லுரி மாணவர்கள் அதிகம். ஆகையால் அவர்கள் விளையாட்டுத் தனமாக இப்படி தொடர்ந்து செய்து வருவதை விஜய் கண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.