தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான தளபதி விஜய், தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பற்றி முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.

TVK Leader Vijay Next Plan in Politics : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் எனவும் விஜய் கூறி இருந்தார். அவரின் இந்த முடிவு கோலிவுட்டுக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அவர் இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் விஜய் நடித்த காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக படமாக்கப்பட்டு விட்டன. ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்த பின்னர் அரசியல் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சைலண்டாகவே இருக்கிறார் தளபதி விஜய்.

விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் பிளான்

இதனால் விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ் என்ன என்பது பற்றி கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதுபற்றிய ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி நடிகர் விஜய், வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாராம். முதற்கட்டமாக 100 இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம். முதல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து நடிகர் விஜய் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்களாம்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட உள்ளார். திமுக, அதிமுகவுக்கு கடும் போட்டியாக தவெக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தொடங்க திட்டமிட்டுதான் நடிகர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறாராம். இதற்கு முன்னர் கோவை, மதுரைக்கு விஜய் சென்றபோதே அங்கு அவரைக்காண ரசிகர்களும் மக்களும் படையெடுத்து வந்ததனர். தற்போது தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.