'இந்தி தேசிய மொழி கிடையாது'; அழுத்தம் திருத்தமாக சொன்ன அஸ்வின்; பாஜக கடும் எதிர்ப்பு!
இந்தி தேசிய மொழி இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதற்கு திமுகவினர் வரவேற்பும், பாஜகவினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
Ravichandran Ashwin
அஸ்வின் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த அஸ்வின் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் 2 போட்டிகளில் விளையாட மறுக்கப்பட்டதாலேயே அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாயின.
Ravichandran Ashwin speech
இந்தி தேசிய மொழி அல்ல
கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த அஸ்வினுக்கு இப்போது பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அஸ்வின் இந்தி மொழி குறித்து பேசியதே காரணமாகும். அதாவது அஸ்வின் சென்னையில் உள்ள ஒரு கல்லுரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், பேசுவதற்கு முன்பு எந்த மொழியின் நான் பேச வேண்டும் என மாணவர்களிடம் கேட்டார்.
அவர் ஆங்கிலம் என்ற சொன்னவுடன் மாணவர்கள் மத்தியில் இருந்து லேசாக சத்தம் வந்தது. பின்பு அவர் தமிழ் என்றவுடன் மாணவர்கள் அதிக கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். பின்பு அவர் இந்தி என்று சொன்னபோது, மாணவர்கள் எந்த சத்தமும் இன்றி நிசப்தமாக இருந்தனர். அப்போது அஸ்வின், ''என்ன சத்தமே இல்லை. இந்தி நமது தேசிய மொழி இல்லை; அது அலுவலக மொழி மட்டுமே'' என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025: சஞ்சு சாம்சன், கில்லுக்கு இடமில்லை? இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11
Ashwin speech about Hindhi
திமுகவினர் வரவேற்பு
அஸ்வினின் இந்த பேச்சு சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஸ்வினின் கருத்துக்கு திமுகவினர் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''இந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. அது அலுவல்ரீதியாக பயன்படுத்தப்படுகிறது அவ்வளவுதான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தன்மை வாய்ந்த பிராந்திய மொழிகள் உள்ளன. அங்கு இந்திக்கு வேலையில்லை. இதைத் தான் நீண்டகாலம் சொல்லி வருகிறோம். தற்போது அஸ்வின் இதை சரியாக கூறியிருக்கிறார்'' என்றார்.
BJP's opposition to Ashwin
பாஜக எதிர்ப்பு
அதே வேளையில் அஸ்வினின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் உமானந்தன், ''இந்தி குறித்து பேசிய அஸ்வினை திமுக பாராட்டி வருவது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் நான் அஸ்வினிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு தேசிய கிரிக்கெட் வீரரா அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் வீரரா? நாம் எப்போதும் தேசிய தலைவர்கள், தேசிய ராணுவ வீரர்கள் என்று தான் சொல்கிறோம். ஏன் இப்படி சொல்கிறோம்? தேசியம் என்று சொல்லும்போது ஒரு ஒற்றுமையை வெளிப்படுகிறது'' என்றார்.
DMK's welcome to Ashwin speech
பல மொழிகளின் கலவை தான் இந்தி
மேலும் இந்த விவகராம் தொடர்பாக பேசிய திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன், ''இந்தியாவில் 30 மாநிலங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மாநிலங்கள் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தங்களின் தாய் மொழியை தான் பேசுகின்றன. 7 முதல் 10 மாநிலங்கள் வரைதான் இந்தி பேசுகின்றன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மொழிகள் பேசப்படும் நிலையில் இந்தி எப்படி தேசிய மொழியாகும். மற்ற மொழிகளை போலவே இந்தியும் ஒரு மொழிதான். அது தேசிய மொழி அல்ல. இந்தி மொழிக்கு தனித்துவம் ஏதும் இல்லை. பல மொழிகளின் கலவை தான் இந்தி'' என்று தெரிவித்தார்.
கோ கோ உலகக் கோப்பை 2025: பிரதீக் வைக்கர், பிரியங்கா இங்கிள் தலைமையில் இந்திய அணிகள் அறிவிப்பு