சாம்பியன்ஸ் டிராபி 2025: சஞ்சு சாம்சன், கில்லுக்கு இடமில்லை? இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் இடம்பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் 'ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025' தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. அனைவருக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இதியா மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் கேப்டன் ரோகித் சர்மா மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த தொடரை வெல்ல இந்திய அணி தீவிரமாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அணியில் யார்? யார்? இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
ரோகித் சர்மா கேப்டன்
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையடுவதால் ஒப்பனிங் களமிறங்கி அணிக்கு தலைமை தாங்குவார். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அறிமுகமாக உள்ளார். அவர் ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்குவார். விராட் கோலிக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு அளிக்கபடுகிறது. அவர் 3வது இடத்தில் களமிறங்குவார். நீண்ட காலமாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பி நான்காவது இடத்தை பூர்த்தி செய்வார்.
சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை?
சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான சாதனை படைத்துள்ள கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட்க்கும் இடம்கிடைக்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் இடத்துக்கு அவரும், கே.எல்.ராகுலும் உள்ளனர். ரிஷப் பண்ட் ரேஸில் இருப்பதால் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் இடம்பெற மாட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா இடம்பெற இருக்கின்றனர். ஸ்பின்னர்களில் குல்தீப் யாதவ், அக்சர் படேலுக்கு இடம்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ்ட் பவுலிங் வரிசையில் பும்ராவுடன் முகமது ஷமி, அர்தீப் சிங் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. பும்ரா இடம்பெற முடியாமல் போனால் அவரது இடத்தில் முகமது சிராஜ் விளையாட வாய்ப்பு இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் படேல், முகமது ஷமி, அர்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜ்.