டிரஸ்ஸிங் ரூமில் கோபத்தில் கத்திய கம்பீர்; ஓய்வு பெறும் ரோகித்?; இந்திய அணியில் பெரும் பிளவு?
கவுதம் கம்பீர் இந்திய வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அணியில் பிளவு ஏற்படுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
India vs Australia Test
இந்தியா மோசமான தோல்வி
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், மெல்பர்னில் நடந்த 4வது டெஸ்ட்டில் 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் என முன்னணி வீரர்கள் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். அதுவும் 4வது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்திய அணி டிரா செய்ய கூட போராடாமல் சரண் அடைந்தது அனைவரயும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Gambhir vs Indian Players
கோபத்துடன் பேசிய கம்பீர்
இந்த தொடரில் ரோகித் சர்மா ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறது. அவரது கேப்டன்சியும் படுமோசமாக உள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அட்டாக்கிங் பீல்டிங் செய்து இந்திய அணியை வீழ்த்திய நிலையில், ரோகித் சர்மா எந்த ஒரு அட்டாக் பீல்டிங்கும் வைக்காமல் மிகவும் சாதாரணமாக செயல்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் இந்திய வீரர்களிடம் கடும் கோபத்துடன் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
India vs Australia 4th Test
நன்றி கூறப்படும்
அதாவது 4வது டெஸ்ட் போட்டியில் அணியின் படுதோல்வியால் விரக்தி அடைந்த கம்பீர், வீரர்களிடம் டிரஸ்ஸிங் ரூமில் கடும் கோபத்துடன் பேசி இருக்கிறார். அதாவது மூத்த வீரர்கள் எவரின் பெயரையும் வெளிப்படையாக கூறாத கம்பிர், ''அணிக்காக சரியாக விளையாடுபவர்கள் தான் எனக்கு வேண்டும். அணிக்கு போதுமான பங்களிப்பு செய்யாத வீரர்கள் நன்றி கூறி வழியனுப்பி வைக்கப்படுவார்கள்''என்று அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
Rohit sharma Batting
கம்பீர்-ரோகித் சர்மா மோதல்
கவுதம் கம்பீரின் இந்த பேச்சால் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடும் விரக்தியில் உள்ளனர். இது தவிர கம்பீர், ரோகித் சர்மா இடையே அணி வீரர்கள் தேர்வில் மோதல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. கம்பீரின் நெருக்கடியால் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், ரோகித் சர்மா அதை விரும்பவில்லை என்றும் கம்பீரின் சில அணுகுமுறை ரோகித்துக்கு பிடிக்கவில்லை என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவங்களால் கடும் விரக்தியில் இருக்கும் ரோகித் சர்மா 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கவுதம் கம்பீர் பயிற்சியில் தள்ளாடும் இந்தியா; அடகொடுமையே! 6 மாதங்களில் இத்தனை தோல்விகளா?