கவுதம் கம்பீர் பயிற்சியில் தள்ளாடும் இந்தியா; அடகொடுமையே! 6 மாதங்களில் இத்தனை தோல்விகளா?
கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்திய அணி வெற்றி பெற திணறி வருகிறது. கம்பீர் தலைமையில் 9 டெஸ்ட் போட்டிகளில் 7ல் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா மோசமான தோல்வி
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா, அதன்பிறகு மோசமாக விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட்டில் மழை காரணமாக தோல்வியில் இருந்து தப்பியது. மெல்பர்னில் நடந்த 4வது டெஸ்ட்டில் 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் என முன்னணி வீரர்கள் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.
கவுதம் கம்பீரால் வந்த சோதனை
இந்த தொடரில் ரோகித் சர்மா சரியாக பேட்டிங் செய்யவில்லை; அத்துடன் அவரது கேப்டன்சியும் சுத்தமாக சரியில்லை. இவரும், பேட்டிங்கில் ரன் அடிக்கத் தடுமாறும் கோலியும் ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது ஒருபுறம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தொடர் தோல்விகளுக்கு பெரும் காரணமாக விளங்கி வருகிறார்.
கம்பீரின் ஆக்ரோஷமான அணுகுமுறை, வீரர்களை அடிக்கடி மாற்றி, மாற்றி களமிறக்குவது போன்ற முடிவுகளால் அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்தியா ஒரு சில டி20 போட்டிகளைத் தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது.
உள்ளூரில் 3-0 என படுதோல்வி
2024ம் ஆண்டு கம்பீர் தலைமையில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்ளூரில் 3-0 என மோசமான தோல்வியை சந்தித்தது. இப்போது ஆஸ்திரேலியா தொடரில் 2 போட்டிகளில் மண்ணை கவ்வியுள்ளது. கம்பீர் தலைமையில் கத்துக்குட்டியான வங்கதேசத்தை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி பெரிய அணிகளிடம் தடுமாறியுள்ளது.
கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வருவதற்கு முன்பு, ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 2024ல் 16 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஆனால் கம்பீர் தலைமையில் 9 டெஸ்ட் போட்டிகளில் 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டும் வங்கதேசத்துக்கு எதிராக வந்த வெற்றி.
கம்பீருக்கு எதிராக வலுக்கும் குரல்கள்
மேலும் கம்பீர் பயிற்சியின் கீழ் இலங்கையில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் தொடரை இழந்தது. இதன் காரணமாக கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளன. அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை நடைபெற உள்ள நிலையில், இதில் இந்தியா வெற்றி பெற கம்பீரின் அணுகுமுறை மாற வேண்டிய தேவை உள்ளது.