IPL 2023: டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனைகளை படைத்த விராட் கோலி
கேகேஆருக்கு எதிரான போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களை விளாசியுள்ள கோலி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்லாது ஐபிஎல்லிலும் விராட் கோலி சாதனைகளை படைத்துவருகிறார். விராட் கோலி ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்காதது ஒன்றுதான் குறை.
வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஆடிவரும் ஆர்சிபி அணி வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவருகிறது. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய மூவரையுமே அதிகமாக சார்ந்திருக்கிறது ஆர்சிபி அணி. இவர்கள் மூவரில் இருவராவது நன்றாக ஆடினால் தான் அந்த அணி ஜெயிக்கிறது. இல்லையெனில் தோல்விகளை தழுவுகிறது.
விராட் கோலியும், ஃபாஃப் டுப்ளெசிஸும் இந்த சீசனில் நன்றாக ஆடிவருகின்றனர். விராட் கோலி 8 போட்டிகளில் 4 அரைசதங்கள் அடித்துள்ளார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 201 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் தோற்றது. விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அதன்பின்னர் ஆர்சிபி வீரர்கள் சிறப்பாக ஆடாததால் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் விராட் கோலி தனித்துவமான சாதனையை படைத்தார். இந்த அரைசதத்தின் மூலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி.
மேலும் ஐபிஎல்லில் 30+ ஸ்கோரை 100 முறை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் கோலி. ஷிகர் தவான் 91 முறை 30+ ரன்கள் அடித்துள்ளார்.