IND vs ENG: மான்செஸ்டரில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

Top 5 highest indian run scorers in Manchester
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும். 1936 முதல் 2014 வரை அங்கு ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணிக்கு ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம் சாதகமாக இருந்ததில்லை.
அங்கு ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யத் தவறியதுடன், ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து, நான்கு போட்டிகளில் டிரா செய்தது. மான்செஸ்டரில் 5 இந்திய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதுகுறித்து பார்பபோம்.
சுனில் கவாஸ்கர்
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் முன்னாள் இந்திய கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர் 48.40 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 242 ரன்கள் குவித்துள்ளார். 1974 டெஸ்டில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
அங்கு அவர் 251 பந்துகளில் 8 பவுண்டை உட்பட 101 ரன்கள் எடுத்தார், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் மொத்தம் 200 டெஸ்ட் ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டு இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கரும் ஒருவர்.
விஜய் மெர்ச்சன்ட்
முன்னாள் இந்திய வீரரான விஜய் மெர்ச்சன்ட் மான்செஸ்டரில் 56.25 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 225 ரன்கள் குவித்துள்ளார். ஓல்ட் டிராஃபோர்டில் டெஸ்டில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய வீரர் இவர்தான். 1936 இங்கிலாந்து சுற்றுப்பயண டெஸ்டில் அவர் சிறப்பாக செயல்பட்டார், 114 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலியுடன் (112) தொடக்க விக்கெட்டுக்கு 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
முகமது அசாருதீன்
முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 1990 இல் ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் ஒரே ஒரு முறை மட்டுமே விளையாடியுள்ளார். ஆனாலும் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அசாருதீன் 95 என்ற சிறப்பான சராசரியுடன் ஒரு சதம் உட்பட 190 ரன்கள் குவித்துள்ளார். மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டார், 243 பந்துகளில் 179 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கருடன் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். டெண்டுல்கர் 136 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
சச்சின் டெண்டுல்கர்
1990 இல் இங்கிலாந்தில் தனது முதல் டெஸ்ட் தொடரின் போது சச்சின் டெண்டுல்கர் ஓல்ட் டிராஃபோர்டில் முதல் மற்றும் ஒரே ஒரு முறை விளையாடினார். பின்னர் புகழ்பெற்ற பேட்ஸ்மேனாக மாறிய டெண்டுல்கர், 1990 மான்செஸ்டர் டெஸ்டில் 187 என்ற சிறப்பான சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 187 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 225 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இது இந்தியா தோல்வியைத் தவிர்க்க உதவியது.
சையத் முஷ்டாக் அலி
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் சையத் முஷ்டாக் அலி ஐந்தாவது இடத்தில் உள்ளார். 1936 மற்றும் 1946 இல் இரண்டு போட்டிகளில் இருந்து நான்கு இன்னிங்ஸ்களில் 43.00 சராசரியுடன் ஒரு சதம் உட்பட 172 ரன்கள் குவித்துள்ளார். 1936 மான்செஸ்டர் டெஸ்டில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
அங்கு அவர் 112 ரன்கள் எடுத்து விஜய் மெர்ச்சன்ட்டுடன் (114) தொடக்க விக்கெட்டுக்கு 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர்களின் பார்ட்னர்ஷிப் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை டிரா செய்வதில் முக்கிய பங்கு வகித்தது.