தேர்வுக்குழு கவனத்தை ஈர்க்கணும்னா 60-70லாம் போதாது; பையன் பட்டைய கிளப்பிட்டான்! பிரித்விக்கு கவாஸ்கர் புகழாரம்
ரஞ்சி டிராபியில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 379 ரன்களை குவித்து சாதனை படைத்த பிரித்வி ஷாவுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ஏகப்பட்ட இளம் வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமான வீரர். இந்திய டெஸ்ட் அணியில் 2018ம் ஆண்டே இடம்பிடித்த பிரித்வி ஷா, காயம் காரணமாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
மற்ற இளம் வீரர்களைவிட விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் பிரித்வி ஷா. அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்து சாதனை படைத்த வீரர் பிரித்வி ஷா. அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கவலை என்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் அவரது ஃபிட்னெஸ் பிரச்னையால் தனக்கான வாய்ப்பை இழந்தார். அந்த காலக்கட்டத்தில், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டனர்.
ஆனால் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததுதான். இயல்பாகவே மிகச்சிறந்த பேட்டிங் திறமையை கொண்ட அசாத்திய வீரர். அசாதாரணமான இன்னிங்ஸ்களை அவ்வப்போது ஆடி அசத்திவிடுவார். மிகத்திறமையான வீரராக இருந்தும் கூட, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷாவுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் எத்தனையோ இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபோதிலும், பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இல்லை. எனவே, ஒருநாள் உலக கோப்பைக்காக பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்துள்ள 20 வீரர்களில் பிரித்வி ஷா இல்லை என்பது தெரிகிறது. இந்திய அணியில் தன்னை புறக்கணிக்கமுடியாதபடி உள்நாட்டு போட்டிகளில் அபாரமான பல இன்னிங்ஸ்களை ஆடிவரும் பிரித்வி ஷா, ரஞ்சி தொடரில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 379 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, 383 பந்தில் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 379 ரன்களை குவித்தார். ரஞ்சி டிராபி வரலாற்றில் ஒரு வீரர் அடித்த 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 1948ம் ஆண்டு சௌராஷ்டிராவிற்கு எதிரான போட்டியில் 443 ரன்களை குவித்த மகாராஷ்டிரா வீரர் பி.பி.நிம்பல்கர் முதலிடத்தில் இருக்கிறார். சஞ்சய் மஞ்சரேக்கர் 377 ரன்களை குவித்து 2ம் இடத்தில் இருந்தார். 379 ரன்களை குவித்த பிரித்வி ஷா, மஞ்சரேக்கரை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடித்தார்.
அபாரமான இன்னிங்ஸை ஆடி சாதனை படைத்த பிரித்வி ஷாவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். பிரித்வி ஷாவும் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து கடுமையாக உழைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அணி தேர்வுக்குழுவின் கவனத்தை பிரித்வி ஷா ஈர்த்துவிட்டதாக கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இதுமாதிரியான இன்னிங்ஸ் தான் பிரித்வி ஷாவிடமிருந்து தேவைப்பட்டது. 60-70 ரன்கள் எல்லாருமே அடிப்பார்கள். இந்திய அணி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் இதுமாதிரியான இரட்டை சதம், முச்சதம் தான் தேவை.
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் புகழாரம் சூட்டிய கம்பீர்
பிரித்வி ஷா கிட்டத்தட்ட 400 ரன்களை அடித்துவிட்டார். 400 ரன்கள் மைல்கல்லை எட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரான 443 ரன்கள் என்ற சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அது அவரால் முடியாமல் போனது என்றார் கவாஸ்கர்.