- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2nd T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் படுமோசமான பேட்டிங் தொடர்கிறது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
சிக்சர் மழை பொழிந்த குயின்டன் டி காக் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 46 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இந்தியாவில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களையும், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங் செய்தனர்.
சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மோசமான பேட்டிங்
பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்து வரும் துணை கேப்டன் சுப்மன் கில் முதல் பந்திலேயே லுங்கி இங்கிடி பந்தில் டக் அவுட் ஆனார்.
அபிஷேக் சர்மாவும் (17) 2 சிக்சருடன் யான்சன் பந்தில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்பு வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் தனது மோசமான பார்மை தொடர்ந்தார். அவர் யான்சன் பந்தில் 5 ரன்னில் காலியானார். பின்பு தடுமாற்றத்துடன் ஆடிய அக்சர் படேல் (21) நடையை கட்டினார்.
திலக் வர்மா சூப்பர் பேட்டிங்
ஒருபக்கம் விக்கெட் விழ மறுபக்கம் திலக் வர்மா அதிரடியில் வெளுத்துக் கட்டி அரை சதம் கடந்தார். சிக்சர்களும், பவுண்டரியுமாக நொறுக்கினார். ஆனால் மறுமுனையில் ரன்கள் அடிக்கத் தடுமாறிய ஹர்திக் பாண்ட்யா (23 பந்தில் 20 ரன்) ஏமாற்றினார். பின்பு வந்த ஜிதேஷ் சர்மா 17 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ஷிவம் துபே (1) பார்ட்மேன் பந்தில் கிளின் போல்டானார். கடைசியில் அர்ஷ்தீப் சிங் (4), வருண் சக்கரவர்த்தி (0) ஆகியோரும் பார்ட்மேன் பந்தில் வீழ்ந்தனர்.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
இறுதியில் தனியொருவனாக போராடிய திலக் வர்மாவும் (34 பந்தில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 62 ரன்கள்) அவுட் ஆக இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஓட்னெய்ல் பார்ட்மேன் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மார்கோ யான்சன் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். லுதோ சிபாம்லா, ஓட்னெய்ல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 90 ரன்கள் விளாசிய குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருது வென்றார்.

