- Home
- Sports
- Sports Cricket
- இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் தோற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை கட் செய்தது மட்டுமின்றி தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லாமல் சூப்பர் 8 சுற்றில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.16.28 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் தோற்றதால் நடவடிக்கை
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'லீக் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அடைந்த தோல்வியைத் தொடர்ந்தே இந்தக் கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் சொதப்பி வருவதால் இந்த அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் வீரர்கள் சாடல்
பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை அந்த நாட்டின் முன்னாள் வீரர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். "நாட்டின் கிரிக்கெட் வலிமையை உலகுக்குக் காட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கிறது, அதை நீங்கள் வீணடித்துவிட்டீர்கள். டி20 இப்போது ஒரு முறையான ஆட்டமாகிவிட்டது, ஆனால் நமது வீரர்கள் மற்ற அணிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை" என்று ஜாவேத் மியான்தத் கடுமையாக சாடினார்.
நம்மால் கோப்பையை வெல்ல முடியாது
"சில வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் அவர்கள் பெரிய தொடர்களில் தோல்வியடைகிறார்கள். இப்போதாவது நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப் தெரிவித்துள்ளார். ''உயர்மட்ட அணிகளைத் தோற்கடிக்கும் திறன் இல்லையென்றால், நம்மால் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாது. நமது முக்கிய வீரர்கள் உலகக் கோப்பையில் ஜொலிக்கவே இல்லை" என்று முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.
பாபர் அசாம் ஓய்வு?
டி20 உலகக்கோப்பையில் சொதப்பிய முன்னாள் கேப்டன் பாபர் ஆசம், தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் போன்ற மூத்த வீரர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடு திரும்பிய பிறகு கேப்டன் சல்மான் அலி ஆகா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பாபர் அசாமும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
