தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி ஓவரில் எட்டிப் பிடித்தது. 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லர் வெற்றியைப் பதிவு செய்து, மதுரை அணி முக்கிய புள்ளிகளைப் பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரில் கடைசி இரண்டு பந்துகள் வரை ரசிகர்களை பதற்றத்தில் வைத்த ட்ரில்லர் ஆட்டத்தில், மதுரை பாந்தர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. தொடக்க சுரேஷ் குமார் 18 பந்துகளில் 43 ரன்கள் விளாசி அதிரடி தொடக்க வீரர் வழங்கினார். தொடர்ந்து சஞ்சய் யாதவ் 37 ரன்களும், ஆர். ராஜ்குமார் 35 ரன்களும் சேர்த்ததால், திருச்சி சவாலான இலக்கை நிர்ணயித்தது.
பந்துவீச்சில் மதுரை அணிக்காக ஆண்டனி தாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கவுதம் தாமரை கண்ணன் 2 விக்கெட்டுகளும், ஆர். ராஜ்குமார் 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இறுதி ஓவர்களில் திருச்சியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மதுரை அணிக்கு கிரண் கார்த்திகேயன் 38 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்தார். பின்னர் என்.எஸ். சதுர்வேத் 27 ரன்களும், பி. சரவணன் வெறும் 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து வெற்றிப் பாதையை அமைத்தனர். நடுவில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், இறுதிக்கட்டத்தில் பதற்றத்தை சமாளித்த மதுரை வீரர்கள் 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
திருச்சி அணிக்காக ராஜலிங்கம் எஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீபேஷ் தேவேந்திரன் மற்றும் குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தாலும், கடைசி நேரத்தில் மதுரையின் அதிரடி பேட்டியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் முக்கியமான இரண்டு புள்ளிகளைப் பெற்றதுடன், தொடரில் தனது நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்தும், இறுதி கட்ட பந்துவீச்சில் ஏற்பட்ட தவறுகள் திருச்சி அணிக்கு தோல்வியை ஏற்படுத்தியது.


