Border-Gavaskar Trophy: ரோகித்க்கு ரெஸ்ட், ஆஸி.க்கு எதிராக இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராஃபி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mohammed Shami-Jasprit Bumrah
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் பார்டர்-காவஸ்கர் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. அதன்படி 5 போட்டிகள் கொண்ட இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற 22ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே போன்று தங்கள் சொந்த மண்ணில் நடைபெறுவதால் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
Rohit Sharma
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு அண்மையில் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் விதமாக முதல் போட்டியில் ரோகித் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற நிலை உள்ளது. அதே போன்று காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கே.எல்.ராகுலும் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் கட்டைவிரல் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
Rohit Sharma
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஞாயிற்றுக் கிழமை சுமார் 3 மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபட்டதால் அவர் முதல் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று முதல் போட்டியில் ரோகித் விளையாடாத பட்சத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Devdutt Padikkal
இதே போன்று பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் முன்னதாக நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த தேவ்தத் படிக்கல் பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த படிக்கல் பயிற்சி ஆட்டத்தில் 36, 88, 26, 1 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.