- Home
- Sports
- Sports Cricket
- ஃபார்முக்கு வருவாரா ஹிட்மேன்? IPL 2026-ல் ரோகித் சர்மா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 2027 உலகக் கோப்பை கனவு பலிக்குமா?
ஃபார்முக்கு வருவாரா ஹிட்மேன்? IPL 2026-ல் ரோகித் சர்மா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 2027 உலகக் கோப்பை கனவு பலிக்குமா?
Rohit Sharma ODI World Cup 2027 Dream: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது கிரிக்கெட் கரியரிலேயே மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பைக்கான இந்த அக்னிப் பரீட்சையில் ஜெயிப்பாரா? என்பது பற்றி பார்க்கலாம்.

Rohit Sharma ODI World Cup 2027 Dream
தனது கிரிக்கெட் கேரியரில் ஒரு முறையாவது ஒருநாள் உலகக் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான் ரோகித் சர்மாவின் மிகப் பெரிய கனவு. ஆனால், ஃபிட்னஸ், வேகம் என எல்லாவற்றையும் வயது பின்னுக்கு இழுக்கிறதா என்ற கேள்விகள் ஒருபக்கம். இளம் வீரர்கள் அடுத்தடுத்து அணிக்குள் வர வரிசையில் நிற்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ரோகித்துக்கும் 39 வயது ஆகிவிடும். 65 நாட்கள் நடக்கப்போகும் இந்த ஐபிஎல் தொடரை, அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் போன்ற தேர்வாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், தனது கரியரின் மிக முக்கியமான ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வருகிறார் ரோகித் குருநாத் சர்மா. இந்த அக்னிப் பரீட்சையில் அவரால் ஜெயிக்க முடியுமா என்பது தான் பலரது கேள்வி.
Mumbai Indians IPL 2026
எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வரும் ரோகித் சர்மா, நெட்டில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது ரோகித்தின் ஒரு புதிய வெர்ஷன். அவரிடம் அதிக ஈடுபாடு தெரிகிறது. ஃபிட்னஸையும் மேம்படுத்தியுள்ளார். அணியை முன்னால் இருந்து ரோகித்தே வழிநடத்துவார் என நம்புகிறோம், என்று மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே கூறியுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விலகிய பிறகு, தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் கரியரில் ஒருவேளை முதல்முறையாக, இப்படி ஒரு கடின உழைப்பை ரோகித் வெளிப்படுத்துகிறார்.
Rohit Sharma
ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் ரோகித் அல்லது கோலிக்கு இடம் கிடைப்பதை, பல ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கியுள்ள சாதனைப் பதிவுகள் மட்டும் தீர்மானிக்காது. ஏனென்றால், ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் இளம் வீரர்கள் சொந்த மண்ணில் டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தனர். இந்த சூழலில் தான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில்ள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
Rohit Sharma Mumbai Indians IPL 2026
அதனால், இந்த ஐபிஎல் தொடர் உலகக் கோப்பைக்கான ஒரு மினி ஆடிஷனாக இருக்கும் என்பது நிச்சயம். ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவதால், ஒரு தொடரில் சொதப்பினால், அதை சரிசெய்ய அடுத்த தொடர் வரை நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை. இது மற்ற ஃபார்மட்களில் விளையாடும் வீரர்களுக்கு இல்லாத ஒரு சிக்கல். ரோகித்துக்கும் இப்போது இதுதான் நிலைமை.
Rohit Sharma World Cup 2026 dream
ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அதைத் தொடர்ந்தார். ஆனால், நியூசிலாந்து தொடரில் ரோகித்துக்கு சறுக்கல் ஏற்பட்டது. 26, 21, 14 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று போட்டிகளிலுமே நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, இப்போது ஐபிஎல் தொடர்தான் அவருக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு. இந்தத் தொடரில் தனது ஐபிஎல் கரியரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Hitman Rohit Sharma batting form 2026
ரோகித்தைப் பொறுத்தவரை, ஐபிஎல் தொடர் அவரது கன்சிஸ்டன்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்திருக்கிறது என்று முழுமையாக சொல்லிவிட முடியாது. உலக கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக இருந்தாலும், பல ஐபிஎல் சீசன்களில் அவரது ஆட்டம் சராசரியாகவே இருந்துள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில நல்ல இன்னிங்ஸ்கள் மட்டுமே ஒரு சீசனில் வரும். இதுவரை நடந்த 18 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய நான்கு வீரர்களில் ரோகித்தும் ஒருவர். ஆனால், ஒரே ஒருமுறை மட்டுமே 500 ரன்களைத் தாண்டியுள்ளார். 2013-ல் 518 ரன்கள் எடுத்தார். 8 சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மாவின் ஐபிஎல் முக்கியத்துவம்
கேப்டன் பதவி ஹர்திக் பாண்ட்யாவுக்கு கைமாறிய பிறகு, மும்பை அணியின் ஸ்கோர் போர்டுக்கு ரோகித்தின் பங்களிப்பு அதிகரித்தது. கடந்த இரண்டு சீசன்களில் ரோகித் 417 மற்றும் 418 ரன்கள் எடுத்தார். இரண்டு சீசன்களிலுமே அவரது ஸ்டிரைக் ரேட் 150-ஐத் தாண்டியது. அவரது ஐபிஎல் கரியரிலேயே இதுதான் முதல்முறை. 2016-க்குப் பிறகு, 2025 சீசனில்தான் ரோகித் மூன்றுக்கும் மேற்பட்ட அரை சதங்களை அடித்தார். கடந்த ஆண்டு மும்பை அணியின் இரண்டாவது டாப் ஸ்கோரராகவும் ரோகித் இருந்தார்.
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா
ஆனால், இந்த முறை சில சுயநலமில்லாத அதிரடி இன்னிங்ஸ்கள் மட்டும் போதாது. மூன்று அல்லது நான்கு நல்ல ஸ்கோர்கள் மட்டும் போதாது. தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி, கன்சிஸ்டன்சியின் மறுபெயராக மும்பைக்காக அவர் நிற்க வேண்டும். அதற்காக, ரோஹித் ஒரு பாதுகாப்பான ஆட்டத்தை தேர்ந்தெடுப்பாரா என்பதுதான் கேள்வி. 2022-ல் இருந்து, அணிக்காக அதிரடியாக ஆடி தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாத ஒரு ரோகித்தைதான் நாம் களத்தில் பார்த்து வருகிறோம். ஆனால், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, கடந்த மூன்று ஒருநாள் தொடர்களில் தனது பழைய நிதானமான ஆட்ட பாணிக்குத் திரும்பியதையும் பார்க்க முடிந்தது.
ரோகித் சர்மா
ஆனால், ஐபிஎல் தொடரில் அதை மீண்டும் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய அந்த 'பயமில்லாத ஆட்டத்தின்' நிறுவனர் அவர்தான். ஆட்டத்தை பின்னோக்கி இழுக்கும் எதையும் ரோகித்திடம் இருந்து எதிர்பார்க்கத் தேவையில்லை. ரோகித் தனது அதிரடி ஆட்டத்தையும், கன்சிஸ்டன்சியையும் எப்படி பேலன்ஸ் செய்யப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை அவர் சரியாகச் செய்துவிட்டால், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான முதல் படியை இந்த ஜாம்பவான் நிச்சயம் உறுதி செய்துவிடுவார்.
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!