- Home
- Sports
- Sports Cricket
- ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
இங்கிலாந்து ஸ்டார் வீரர் ரன் மெஷின் ஜோ ரூட் 2வது ஆஷஸ் டெஸ்ட்டில் சூப்பர் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் அடித்த முதல் சதம் இதுவாகும்.

ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட் முதல் சதம்
பிரிஸ்பேனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீரர் ஜோ ரூட் சூப்பர் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் சதம் அடித்திருந்த ஜோ ரூட், ஆஸ்திரேலியாவில் மட்டும் இதுவரை எந்த ஒரு சர்வதேச சதமும் அடிக்காமல் இருந்தார்.
ஆனால் இப்போது முதன் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தனது 40வது டெஸ்ட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஜோ ரூட் 202 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
ஜோ ரூட் அட்டகாசமான சதம்
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் எட்டு ரன்களுக்கு அவுட்டானார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சிலேயே ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை விளாசியுள்ளார். 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் நாளில் இங்கிலாந்து ரன் குவிப்பு
முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன தொடக்க வீரர் ஜாக் கெரொலி 76 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 264/9 என்ற நிலையில் இருந்தபோது கடைசியில் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் 26 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். ஜோ ரூட் 135 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
ஸ்டார்க் 6 விக்கெட்
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்ச்செல் ஸ்டார்க் 19 ஓவரில் 71 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். மைக்கேல் நேசர், ஸ்காட் போலண்ட் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் நாளில் இங்கிலாந்து வலிமையாக உள்ள நிலையில், நாளை 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

