- Home
- Sports
- Sports Cricket
- ஆஷஸ் தொடரில் சதம் அடித்தால் ஆஸி.க்கு ரூ.17 கோடி இழப்பு! வருத்தம் தெரிவித்த டிராவிஸ் ஹெட்!
ஆஷஸ் தொடரில் சதம் அடித்தால் ஆஸி.க்கு ரூ.17 கோடி இழப்பு! வருத்தம் தெரிவித்த டிராவிஸ் ஹெட்!
பெர்த் ஆஷஸ் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்ததால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் விற்பனையில் சுமார் ரூ.17.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முன்கூட்டிய முடிவு ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள வாரியத்தின் நிதி நெருக்கடியை அதிகரித்துள்ளது.

ஆஸி.க்கு ரூ.17.35 கோடி இழப்பு
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, வெறும் இரண்டே நாட்களில் முடிவடைந்ததால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு (CA) பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்க வேண்டிய வருவாயில் சுமார் 3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17.35 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டே நாளில் முடிந்த மேட்ச்
ஆடுகளத்தில் இருந்த வேகம் மற்றும் பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் காரணமாக, இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஆட்டங்களும் நான்கு செஷன்களுக்குள் முடிவடைந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியிருக்க வேண்டிய நிலையில், அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணி 164 ரன்களுக்குச் சுருண்டதால், ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
காயம் காரணமாக உஸ்மான் கவாஜாவுக்குப் பதில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 83 பந்துகளில் 123 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 150) விளாசினார். மார்னஸ் லபுஷேன் 51 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
டிக்கெட் வருவாய் இழப்பு
டெஸ்ட் போட்டிகளில் 3-வது நாள் ஆட்டம் மிக முக்கியமானது (Moving Day) என்பதால், அன்றைய தினம் மைதானத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
முதல் நாளில் 51,531 பேரும், இரண்டாம் நாளில் 49,983 பேரும் என மொத்தம் 1,01,514 ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். இது பெர்த் மைதானத்தில் ஒரு சாதனை ஆகும்.
ஆனால், போட்டி 3-வது நாளுக்குச் செல்லாததால், அந்த நாளுக்கான டிக்கெட் விற்பனை வருவாய் மற்றும் மைதானத்தில் நடைபெறும் இதர விற்பனைகள் மூலம் கிடைக்க வேண்டிய தொகை முழுவதும் இழப்பாக மாறியுள்ளது.
டிராவிஸ் ஹெட் வருத்தம்
இது குறித்துப் பேசிய ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட், "நாளை (3-ம் நாள்) போட்டியைப் பார்க்க முடியாத ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். நாளையும் அரங்கம் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்த்தேன்," என்றார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பெர்க் கூறுகையில், "போட்டி முன்கூட்டியே முடிவது ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வாரியத்தின் டிக்கெட் வருவாயைப் பெரிதும் பாதிக்கும். இது பொருளாதார ரீதியாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ரூ.65.38 கோடி நஷ்டத்தைச் சந்தித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு, இது போன்ற குறுகிய நாட்களில் முடியும் டெஸ்ட் போட்டிகள் மேலும் நெருக்கடியை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.