இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். புதிய கேப்டன் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், முதுகுத்தண்டு அழுத்தக் காயம் காரணமாக பெர்த்தில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது. இதனால் பெர்த்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட்டில் இருந்து கம்மின்ஸ் விலகல்
டிசம்பர் 4 முதல் பிரிஸ்பேனில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கம்மின்ஸ் தயாராகி வருகிறார். கம்மின்ஸ் கடந்த சில வாரங்களாக முதுகு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். நவம்பர் 21 முதல் பெர்த்தில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க அவர் சரியான நேரத்தில் குணமடைய மாட்டார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) உறுதிப்படுத்தியுள்ளது.
காயத்தின் தன்மை கணிக்க முடியாது
இருப்பினும், தொடரின் பிற்பகுதியில் அவர் பங்கேற்பார் என்று வாரியம் நம்பிக்கையுடன் உள்ளது. கம்மின்ஸ் மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளார், விரைவில் பந்துவீசத் தொடங்கி தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அளித்த பேட்டியில், "நாங்கள் சிறிது காலமாக இதனுடன் போராடி வருகிறோம். காயத்தின் தன்மை கணிக்க முடியாதது. ஒவ்வொரு நாளையும் பொறுத்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
2வது டெஸ்ட்டில் களம் காண்பார்
தொடர்ந்து பேசிய அவர் "எங்களுக்கு நேரம் போதவில்லை. அவர் (கம்மின்ஸ்) மீண்டும் விளையாட நான்கு வாரங்களுக்கு மேல் ஆகும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு
கம்மின்ஸின் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகும். இங்கிலாந்தில் நடந்த 2023 ஆஷஸ் தொடரில், அவர் 37.72 சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, நான்காவது அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருந்தார். பேட்டிங்கிலும் சில முக்கிய பங்களிப்புகளைச் செய்தார். முதல் டெஸ்ட்டில் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்காட் போலண்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் அணியில் இருப்பார். ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 அன்று தொடங்குகிறது.
ஆஷஸ் தொடர் அட்டவணை:
முதல் டெஸ்ட்: பெர்த் ஸ்டேடியம், நவம்பர் 21-25
இரண்டாவது டெஸ்ட்: கப்பா, டிசம்பர் 4-8
மூன்றாவது டெஸ்ட்: அடிலெய்டு ஓவல், டிசம்பர் 17-21
நான்காவது டெஸ்ட்: MCG, டிசம்பர் 26-30
ஐந்தாவது டெஸ்ட்: SCG, ஜனவரி 4-8
