IND vs AUS: அரை மணி நேரத்தில் ஆஸி., பேட்டிங் ஆர்டரை பொட்டளம் கட்டிய அஷ்வின், உமேஷ் யாதவ்
3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணியை 197 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடுகிறது இந்தியா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் கேஎல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா
ஆஸ்திரேலிய அணி:
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் க்ரின், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னெமன்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(21), புஜாரா(1), கோலி(22), ஜடேஜா(4), ஷ்ரேயாஸ் ஐயர்(0), பரத்(17), அக்ஸர்(12) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் 3ம் வரிசையில் இறங்கிய லபுஷேனும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 2வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த கவாஜா (60) மற்றும் லபுஷேன்(31) ஆகிய இருவரையும் ஜடேஜா வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித்தையும் ஜடேஜா 26 ரன்களுக்கு வீழ்த்த 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர். 2ம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் அவர்கள் இருவரும் தாக்குப்பிடித்து ஆடினர். 5வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் பந்துவீச வந்த அஷ்வின், ஹேண்ட்ஸ்கோம்ப்பை 19 ரன்களுக்கு வீழ்த்த, அதன்பின்னர் ஆஸி., பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டாய் சரிந்து அடுத்த 11 ரன்களுக்கு எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 6 விக்கெட்டுகளில் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அரை மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியை சுருட்டினர். 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, லன்ச்சுக்கு முன் 15 நிமிடம் பேட்டிங் ஆடி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் அடித்துள்ளது.