இந்திய அணி ரொம்ப ஸ்மார்ட்.. எல்லா தவறையும் நீங்க பண்ணிட்டு பிட்ச்சை குறை சொல்லாதீங்க - மைக்கேல் கிளார்க்
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய ஆடுகளங்களை குறைகூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையையும் ஆட்டத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அணியின் கனவு தகர்ந்துவிட்டது. இப்போதைக்கு ஒயிட்வாஷ் ஆகாமல் நாடு திரும்பினால் போதும் என்ற நெருக்கடி நிலைக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதையறிந்து, இந்த தொடருக்கு முன்பாகவும், தொடரின் இடையேயும் ஸ்பின்னை எதிர்கொள்ள தீவிர பயிற்சி மேற்கொண்டும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பினர். அதன்விளைவாகத்தான் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது அந்த அணி.
2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை நன்றாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியிருந்த நிலையில், நல்ல ஸ்கோர் அடித்துவிட்டு கடைசி இன்னிங்ஸில் இந்தியாவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி கொட்டிக்கொண்டனர். ஸ்பின்னை எதிர்கொள்ள ஸ்வீப் ஷாட் சிறந்த ஆயுதம் என்றாலும், அதை அளவுக்கு மீறி பயன்படுத்தி மளமளவென ஆஸி., வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி படுதோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக தயார் செய்யப்பட்டதாகவும், இந்திய அணியின் பலத்திற்கு தயார் செய்யப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், எல்லா தவறுகளையும் ஆஸ்திரேலிய அணி செய்துவிட்டு, இந்திய ஆடுகளங்களை விமர்சிப்பது சரியல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விளாசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க், மேத்யூ ஹைடன் மற்றும் மார்க் வாக் ஆகிய இருவரும் இந்த தொடரில் வர்ணனை செய்வதற்காக இந்தியாவில் தான் உள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவில் நிறைய ஆடிய அனுபவம் கொண்டவர்கள். மேத்யூ ஹைடன் நன்றாக ஸ்வீப் ஷாட் ஆடக்கூடியவர். எனவே வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஹைடன் மற்றும் மார்க் வாகின் உதவியை ஆஸ்திரேலிய அணி நாடியிருக்க வேண்டும். ஒவ்வொரு டிரெய்னிங் செசனிலும் அவர்களை பக்கத்தில் வைத்து, ஆலோசனைகளை பெற்று பயிற்சி செய்திருக்க வேண்டும். ஸ்பின்னை ஸ்வீப் ஷாட் ஆடுவது நல்லதுதான். ஆனால் ஒவ்வொரு பந்தையும் ஸ்வீப் ஷாட் ஆடக்கூடாது. ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் எல்லாம் களத்தில் செட்டில் ஆகி 80 ரன்கள் அடித்தபின் ஆடவேண்டியது. அதை 8 ரன் இருக்கும்போது ஆடக்கூடாது. அணி நிர்வாகம் ஹைடன், மார்க் வாகை ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை..?
இந்திய ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும். இந்திய அணி ரொம்ப ஸ்மார்ட். ஹோம் கண்டிஷனில் அவர்களுக்கு தேவையான ஆடுகளத்தை தயார் செய்துகொண்டார்கள். அதை குறை சொல்லக்கூடாது. மற்ற அணிகள் ஆஸ்திரேலியாவிற்கு வரும்போது முதல் டெஸ்ட்டை பிரிஸ்பேனில் நடத்தி, வேகம் மற்றும் பவுன்ஸை நமக்கு சாதகமாக பயன்படுத்தி, அதை பலமாக பயன்படுத்தி எதிரணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதேபோல் தானே மற்ற அணிகளும் ஹோம் கண்டிஷனை பயன்படுத்துவார்கள். அஷ்வின், ஜடேஜா மாதிரியான ஸ்பின்னர்களை இந்திய கண்டிஷனில் எதிர்கொள்ள தீவிர பயிற்சியுடன் சிறப்பாக தயாராகுவதான் சரியானது என்று மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார்.