IND vs AUS: ராகுல் - கில்.. 3வது டெஸ்ட்டில் யாரை தொடக்க வீரராக இறக்குவது டீமுக்கு நல்லது.? ஆகாஷ் சோப்ரா அதிரடி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவது என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், இதுகுறித்த தனது கருத்தை கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது. இப்போதைய சூழலில் அந்த அணி ஒயிட்வாஷ் ஆகமால் நாடு திரும்பவேண்டும் என்றுதான் நினைக்கும்.
முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். இந்திய அணியின் ஒரே பிரச்னை, தொடக்க வீரர் கேஎல் ராகுல் சரியாக ஆடாததுதான். ராகுல் திறமையான வீரர் தான் என்றாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. அண்மைக்காலமாக அவர் மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார். 2022ம் ஆண்டிலிருந்து கடைசி 11 இன்னிங்ஸ்களில் ராகுல் அடித்த ஸ்கோர் - 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ஆகும். கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் ராகுலை டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக இறக்கியது விமர்சனத்துக்குள்ளானது. 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டதால் 3வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதேவேளையில், ராகுலுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என அணி நிர்வாகத்தின் ஆதரவு இருக்கிறது.
IND vs AUS: தம்பி நீ வேலைக்கு ஆகமாட்ட கிளம்பு! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்
கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரர் என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறங்கலாம். அவர் டாப் ஃபார்மில் இருக்கிறார். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுவே அவர் நீக்கப்படுவதற்கான சமிக்ஞை தான். ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ராகுலுக்கு ஆதரவாக உள்ளனர். 2012ம் ஆண்டு இதேமாதிரியான நெருக்கடியான சூழலில் தான் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் எப்படி ஆடினார் என்று பார்த்திருக்கிறோம் என்றார் ஆகாஷ் சோப்ரா.