- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS: 2வது ஓடிஐயில் தோற்று தொடரை பறிகொடுத்த இந்தியா! தோல்விக்கு இதுதான் காரணம்!
IND vs AUS: 2வது ஓடிஐயில் தோற்று தொடரை பறிகொடுத்த இந்தியா! தோல்விக்கு இதுதான் காரணம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஓடிஐயில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் பறிகொடுத்தது. இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ
அடிலெய்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ரோஹித் சர்மா 97 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 77 பந்தில் 7 பவுண்டரியுடன் 61 ரன்கள் அடித்தார். அக்சர் படேல் 44 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 10 ஓவரில் 60 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்பு சவாலான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவரில் 8 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
தொடக்கத்தில் ஆஸி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதிரடி வீரர்கள் மிட்செல் மார்ஷ் (11) அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டும் (28) ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்பு ஜோடி சேர்ந்த ஷார்ட் - மாட் ரென்ஷா ஜோடி 55 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது.
சூப்பர் பேட்டிங்
நன்றாக விளையாடிய ரென்ஷா 30 ரன்னில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரியை (9) வாஷிங்டன் சுந்தர் போல்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கொனோலி - ஷார்ட் ஜோடி சூப்பராக விளையாடி 55 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ஷார்ட்டை (78 பந்தில் 74 ரன்) ஆட்டமிழக்கச் செய்து ராணா இந்தியாவுக்கு பிரேக்-த்ரூ கொடுத்தார்.
ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன்
பின்னர் மிட்செல் ஓவன் களமிறங்கி 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் கொனோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே சேவியர் பார்ட்லெட் (3), மிட்செல் ஸ்டார்க் (4) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், கொனோலி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கொனோலி 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 61 ரன் எடுத்து களத்தில் இருந்தார். 4 விக்கெட் வீழ்த்திய ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்தியா தோல்விக்கு காரணம் என்ன?
இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. ஷார்டுக்கு அக்சர் படேல், சிராஜ் எளிதான கேட்ச்களை கோட்டை விட்டனர். அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம். இதேபோல் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு தடுமாறும் நிலையில், இந்தியாவின் மெயின் பவுலர் குல்தீப் யாதவ்வை அணியில் எடுக்காதது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.