ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸி கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் சூப்பராக விளையாடினார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தியா, கடைசி 10 ஓவர்களில் 86 ரன்கள் குவித்து 136 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் இந்தியாவின் அதிகப்பட்ச ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி

அக்சர் படேல் 38 பந்துகளில் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்தனர். டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 131 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ குனேமன், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு சவாலான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன்

கேப்டன் மிட்செல் மார்ஷ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். ஜோஷ் பிலிப் (37) தரமான இன்னிங்ஸ் ஆடி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். மாட் ரென்ஷா (24 பந்துகளில் 21) நல்ல பங்களிப்பு செய்தார். மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

எங்களுக்கு அதிர்ஷ்டம்

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், ''பவர்பிளேயில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு மீள்வது எளிதானது அல்ல. ஆனாலும் இந்த போட்டியில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் மற்றும் சாதகமான அம்சங்களும் இருந்தன. ஆனாலும் 26 ஓவரில் 130 ரன்கள் இலக்கை வைத்து போட்டியை ஆழமாக எடுத்துச் சென்றோம். நாங்கள் எங்கு விளையாடினாலும், ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம்'' என்று தெரிவித்தார்.