- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 1st Test: துருவ் ஜுரெல் இடத்துக்கு ஆப்பு வைக்கும் ஆல்ரவுண்டர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 1st Test: துருவ் ஜுரெல் இடத்துக்கு ஆப்பு வைக்கும் ஆல்ரவுண்டர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
தென்னாபிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட்டில் துருவ் ஜுரெல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடையே போட்டி நிலவுவதாக கூறியுள்ள பார்த்தீவ் படேல், இந்திய அணி பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி குவஹாத்தியில் நடைபெறுகிறது.
இந்திய அணி பிளேயிங் லெவன்
இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய பார்த்தீவ் படேல், மூன்று முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியைப் பரிந்துரைத்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமே நிச்சயமற்ற தன்மை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
6ம் இடத்தில் சிக்கல்
“யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். சாய் சுதர்சன் 3-ம் இடத்திலும், சுப்மன் கில் 4-ம் இடத்திலும், ரிஷப் பந்த் 5-ம் இடத்திலும் விளையாடுவார்கள். 6-ம் இடம் சற்று சிக்கலானது. மற்றபடி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருப்பார்கள்” என்று படேல் விளக்கினார்.
நிதிஷ் ரெட்டியா? இல்லை துருவ் ஜுரெலா?
“இந்தியாவுக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கும், அது 6-ம் இடத்தில் நிதிஷ் ரெட்டியை விளையாட வைப்பதா அல்லது துருவ் ஜுரெலை விளையாட வைப்பதா என்பதுதான். நிதிஷ் ரெட்டியால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரின் பங்கைச் செய்ய முடியுமா?
அப்படியானால், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் நிதிஷ் ரெட்டியைப் பயன்படுத்தலாம், மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் கை கொடுப்பார்கள்” என்று பார்த்தீவ் படேல் கூறினார்.
ஆல்ரவுண்டர் வேண்டுமா?
தொடர்ந்து பேசிய அவர் “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த அணியுடனோ, எந்த நிலையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் ஜுரெல் ரன்கள் எடுத்துள்ளார். நீங்கள் எந்த மாதிரியான அணியுடன் விளையாட விரும்புகிறீர்கள் என்பதுதான் ஒரே விஷயம். நீங்கள் ஒரு ஆல்-ரவுண்டருடன் விளையாட விரும்பினால், அவருக்கு இடம் கிடைக்காமல் போகலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
''ஒரு பேட்டரை விளையாட வைக்க விரும்பினால், துருவ் ஜுரெல் அங்கு விளையாடலாம். அவர் பெர்த்தில் ஒரு பேட்டராக விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் அணியில் ஒரு பேட்டராகக் கருதப்படுவதற்கு துருவ் ஜுரெல் போதுமானதைச் செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்” என்று படேல் மேலும் கூறினார்.
ஜுரெலின் சமீபத்திய ஃபார்ம்
இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இரட்டை சதங்கள் அடித்து ஜுரெல் தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவர் முதல் இன்னிங்ஸில் 175 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 பந்துகளில் 127 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.