- Home
- Tamil Nadu News
- Puducherry
- இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. மதுபான மொத்த விற்பனைக்கு தடை.!
இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. மதுபான மொத்த விற்பனைக்கு தடை.!
Liquor Sales: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களை கவர மதுபானம் மொத்தமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, மொத்த விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுபானத்தை மொத்தமாக வாங்கி பலர் சட்டவிரோமாக விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதன் காரணமாக மதுபான மொத்த விற்பனைக்கு தடை விதித்துள்ளதோடு, விதிமீறலில் ஈடுபடும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மாத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது கலால்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுபானம் வழங்கும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் அனைத்து உரிமதாரர்களுக்கும், வாங்கப்பட்ட அளவைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான ரசீதை கொடுக்க வேண்டும். அதேபோல் புதுச்சேரி கலால் வரிச் சட்டங்கள் மற்றும் விதிகள் 1970-ஐ மீறி, சில உரிமதாரர்கள்/குத்தகைதாரர்களால் மதுபானம் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக, கலால்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
ஒவ்வொரு கொள்முதலுக்கும் ரசீது வழங்காதது, மொத்த விற்பனையை மறைப்பதைக் காட்டுவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மதுபானம் விற்பனை செய்வதற்கு உரிமதாரர் சாக்குப்போக்கு சொல்லவும் வழிவகுக்கிறது. மேலும், ரசீதுகள் இல்லாமல் விற்கப்படும் எந்தவொரு மதுபான விற்பனையும் (அளவைப் பொருட்படுத்தாமல்), புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ல் ஈடுபட்டுள்ள நபர்கள், வாக்காளர்களைத் தூண்டுவதற்காக மதுபானத்தைக் குவித்து வைக்க உரிமதாரருக்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்று இப்போது கருதப்படுகிறது. அதன்படி, செல்லுபடியாகும் ரசீதுகள் இல்லாத அனைத்து விற்பனைகளும் மொத்த விற்பனையாகக் கருதப்படும்.
எனவே, புதுச்சேரி மண்டலத்தின் அனைத்து மதுபான உரிமதாரர்கள் / குத்தகைதாரர்களும், புதுச்சேரி கலால் விதிகள் 1970-இன் விதி 22-இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, முறையான ரசீதுகளுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட விற்பனை அளவிற்குள் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான எந்தவொரு குறைபாடும் மிகவும் கடுமையாகக் கருதப்படும் மற்றும் புதுச்சேரி கலால் சட்டம் 1970 இன் பிரிவு 28(1)(e) இன் படி உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

