தமிழகத்தில் விஜய் இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது போல, புதுச்சேரியில் அது முழுமையாக நடக்கவில்லை. அங்குள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் இன்னும் ரங்கசாமியின் நலத்திட்டங்கள் மற்றும் பிஜேபியின் வாக்குறுதிகள் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்தனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க உள்ளது. தவெக 34% வாக்குகளுடன் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. தமிழகத்தில் விஜய் அலை உருவானது என்றே சொல்ல வேண்டும். இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் விஜய்க்கு அலை அலையாக வாக்களித்து விட்டார். தமிழகத்தில் விஜய் அலை உருவான நிலையில், புதுச்சேரியில் விஜய் அலை ஏதும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யை ஏமாற்றிய புதுச்சேரி

புதுவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி இதுவரை 9 இடங்களில் வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மேஜிக் நிகழ்த்திய தவெக 2 இடங்களில் வெற்றி பெற்று 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தவெக நிகழ்த்திய அதியசத்தை வைத்து பார்க்கையில் புதுவையில் அந்த கட்சி 10 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரியில் அந்த மேஜிக் நிகழவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் பிரதானமாக உள்ளன.

ரங்கசாமி மாஸ்

தமிழகத்தில் ஒரு வெற்றிடம் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி ஒரு செல்வாக்கு மிக்க 'மாஸ்' தலைவராகத் திகழ்கிறார். மக்கள் அவரிடம் எளிதில் அணுகக்கூடிய தன்மையைக் காண்பதால், ஒரு புதிய சினிமா நட்சத்திரத்தின் வருகை அங்கு பெரிய அதிர்வலைகளை உருவாக்கவில்லை. ரங்கசாமியின் தனிப்பட்ட செல்வாக்கு விஜய்யின் இளைஞர் வாக்குகளைக் கவர்வதில் பெரிய தடையாக இருந்தது.

வேட்பாளர்கள் தேர்வு

புதுச்சேரியில் விஜய் களம் இறக்கிய 30 வேட்பாளர்களில் பலர் ஏற்கனவே மற்ற கட்சிகளில் அதாவது பாஜக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். உதாரணமாக முன்னாள் பிஜேபி தலைவர் வி.சாமிநாதன் போன்றவர்கள் தவெகவில் இணைந்தது கட்சிக்கு 'புதுமை' என்ற பிம்பத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது. மக்கள் பழைய முகங்களே புதிய கட்சியில் வருகிறார்கள் என்று கருதியதால், தமிழகத்தில் இருந்தது போன்ற ஒரு மாற்று அரசியல் எழுச்சி அங்கு மிதமானது.

தனித்துவமான அரசியல் கலாச்சாரம்

புதுச்சேரி அரசியல் என்பது தொகுதி வாரியாக மிகச்சிறிய எல்லைகளைக் கொண்டது (சராசரியாக 30,000 வாக்காளர்கள்). இங்கு கட்சிக் கொள்கைகளை விட, வேட்பாளருடன் மக்களுக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்பு மற்றும் குடும்ப உறவுகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. விஜய்யின் 'ஸ்டார் அந்தஸ்து' கூட்டத்தைக் கூட்டினாலும், இந்தத் தனிநபர் செல்வாக்கு அரசியலை உடைப்பது கடினமாக இருந்தது.

இளைஞர்க‌ள் வாக்குகள் பிரிந்தது

தமிழகத்தில் விஜய் இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது போல, புதுச்சேரியில் அது முழுமையாக நடக்கவில்லை. அங்குள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் இன்னும் ரங்கசாமியின் நலத்திட்டங்கள் மற்றும் பிஜேபியின் வாக்குறுதிகள் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்தனர். எக்சிட் போல் தரவுகளின்படி தவெகவுக்கு இளைஞர்களிடையே 50% ஆதரவு இருந்தாலும், மற்ற வயதினரிடம் அது 15%-க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.