- Home
- Tamil Nadu News
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை.. மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை.. மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு!
School Holiday: புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
முத்துமாரியம்மன் தேரோட்டம்
அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது. இந்த தேரோட்டதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
அன்றைய தினம் பள்ளிகளில் ஏற்கனவே முழு ஆண்டு தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அரசு பொதுத்தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
தேர்வு தேதி மாற்றம்
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் முழு நேரம் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முழு ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு
அதாவது நாளைய தினம் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியின்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

