- Home
- Politics
- ADMK: கொறடா உத்தரவை மீறிய 25 அதிமுக எம்எல்ஏ-க்கள்.! பதவியை பறிக்கும் எடப்பாடி? பாயப்போகும் நடவடிக்கை.!
ADMK: கொறடா உத்தரவை மீறிய 25 அதிமுக எம்எல்ஏ-க்கள்.! பதவியை பறிக்கும் எடப்பாடி? பாயப்போகும் நடவடிக்கை.!
Tamil Nadu Floor Test News Today : அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu Floor Test News Today
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், இன்று அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்து வாக்களித்தனர். இது குறித்து ஏற்கனவே அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

1. கட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் படி ஒரு கட்சியின் எம்எல்ஏ அல்லது எம்பி தனது கட்சியின் உத்தரவை மீது செயல்பட்டால் அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். கட்சித் தலைமை அல்லது கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவையில் வாக்களிப்பது, வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் நடுநிலை வகிப்பது, தாமாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியை துறப்பது ஆகியவை தகுதி நீக்கத்திற்கான காரணங்களாகும்.
2. எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தப்பிப்பார்களா?
சட்டத்தின் படி ஒரு கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். அதிமுகவுக்கு தற்போது சட்டப்பேரவையில் 47 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். அதிமுகவின் பலத்தை வைத்து பார்க்கும் பொழுது 25 என்பது மூன்றில் இரண்டு பங்கிற்கு குறைவான எண்ணிக்கை ஆகும். எனவே அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் தங்களை தனிக் குழுவாகவோ அல்லது மற்றொரு கட்சியுடனும் இணைத்துக்கொள்ள முடியாது.
3. சபாநாயகரின் அதிகாரம்
இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்கே உள்ளது. அதிமுகவின் கொறடா, விதிகளை மீறிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் புகார் அளிப்பார். சபாநாயகர் சம்பந்தப்பட்ட 25 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார். விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடுவார். சபாநாயகர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர் என்பதால் இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
4. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் எம்எல்ஏக்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அதிமுகவின் சட்டமன்ற பலம் குறையும். 22 எம்எல்ஏக்களுடன் மூன்றாம் இடத்தில் அதிமுக தள்ளப்படும். 25 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு அங்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒருவேளை சபாநாயகர் அதிமுக கொறடாவின் கோரிக்கையை ஏற்காமல் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மறுக்கும் பட்சத்தில் அவரின் முடிவை எதிர்த்து அதிமுக தலைமை உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
முக்கிய குறிப்பு:
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களான இந்த 25 பேரும் ஒரு தனிக்குழு என்று கூறிக் கொண்டாலும் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லையெனில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் தவெகவில் இணைந்தால் அது கட்சித் தாவலாகவே பார்க்கப்படும். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி ஆட்சியின் ஸ்திரத்தன்மை அல்லது எதிர்க்கட்சியின் அந்தஸ்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த விவகாரத்தில் சபாநாயகர் மற்றும் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதி முடிவாக இருக்கும்.

