திமுக தான் ஆட்சியை பிடிக்கும் 45%..! அதிமுக 4% கேப்.. கை கொடுப்பரா விஜய்?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில், அதிமுக, விஜய்யின் தவெக கட்சிகளின் நிலை என்ன?

தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் மக்களை நேரில் சந்திக்கும் வகையில் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. அதில் ஆளுங்கட்சியான திமுக, ஓரணியில் தமிழகம் என்ற முழக்கத்தோடு இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்கும் பணியை வீடு விடாக தொடங்கியுள்ளது.
அப்போது தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருவதை மக்களிடம் எடுத்து கூறியும், அதிமுக- பாஜகவின் தமிழகத்திற்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாட்டையும் கூறி வருகிறது. அடுத்தாக எதிர்கட்சியான அதிமுக, கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
பிரச்சாரத்தை தொடங்கிய அரசியல் தலைவர்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறியும், தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை பட்டியலிட்டும் பேசி வருகிறார். மேலும் பொதுமக்களின் கோரிக்கையையும் கேட்டறிந்து வருகிறார்.
இதை போல அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து திமுக மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்தும், தவெக ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கருத்து கணிப்பு முடிவுகள்
இந்த பரபரபான சூழலில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆகஸ்ட் மாத நிலவரம் தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணி 42 முதல் 45 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியானது 25 முதல் 39 சதவிகித வாக்குகளையும்,
விஜய்யின் தவெக 6 முதல் 8 சதவிகித வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4 முதல் 6 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. மற்றவைகள் பொறுத்தவரை 5 முதல் 6 சதவிகித வாக்குகளை கைப்பற்ற வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆதரவு யாருக்கு.?
எனவே ஆட்சியை திமுக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவே இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எனவே அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க நடிகர் விஜய்யின் ஆதரவு முக்கிய தேவையாக உள்ளது. எனவே அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போது வரை தனது தலைமையிலான கூட்டணி என விஜய் உறுதியாக கூறி வருவதால் அதிமுக- பாஜக என்ன திட்டமிடப்போகிறது என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் தெரியவரும். மேலும் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளதால் அப்போது உள்ள கள நிலவரம், தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றை பொறுத்து முடிவுகள் மாற வாய்ப்பு உள்ளது.