ராமதாசுக்கு நல்ல புத்தி கொடு.. தலைய கூட தூக்க பயந்ததவங்க ஐயாவுக்கு அட்வைஸ்
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாக, அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் ராமதாஸுக்கு நல்ல புத்தி வேண்டி பிரார்த்தனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே முரண்பாடு எழுந்தது. ராமதாஸ் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி விரும்பினார்,
ஆனால் அன்புமணி பாஜகவுடன் கூட்டணிக்கு உறுதியாக இருந்தார். இதனையடுத்து பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி மேடையிலேயே தனது எதிர்ப்பு தெரிவித்தார், இது மோதலை நிர்வாகிகள் மத்தியில் பகிரங்கப்படுத்தியது.
அடுத்தாக அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க மிரட்டியதாகவும், இது தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார். மேலும் தாயை கூட அன்புமணி அடிக்க பாய்ந்தார் என பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அன்புமணி, தனது தந்தை குழந்தையாக மாறி விட்டார் என பதில் அளித்து இருந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை தொட்டது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவான நிர்வாகிகளை அன்புமணியும் நீக்கினார்கள். இதனால் எந்த பக்கம் செல்வது என நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் அன்புமணி ஆகஸ்ட் 9 அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிராக, ராமதாஸ் ஆகஸ்ட் 17-ல் புதுச்சேரியில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்து, அன்புமணியின் கூட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், நீதிமன்றம் இது தந்தை-மகன் இடையேயான தனிப்பட்ட மோதல் எனக் கூறி, ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து, அன்புமணியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அன்புமணியின் இருக்கைக்கு அருகில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு என தனி இருக்கை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்தை ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
முன்னதாக பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே விநாயகர் சிலை முன்பு அன்புமணி ஆதரவாளர்கள் வழிபட்டனர். அப்போது மருத்துவர் ஐயாவிற்கு நல்ல புத்தியை கொடு என வேண்டிக்கொண்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனரான ராமதாஸ், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர்களோடு எதிராக அரசியல் செய்தவருக்கு தனது கட்சி காரர்களே நல்ல புத்தியை கொடு என வேண்டிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எதிராக தலையை கூட தூக்க பயந்த நிர்வாகிகள் எல்லாம் தனக்கு அட்வைஸ் செய்வதை ராமதாஸால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.