- Home
- உடல்நலம்
- World AIDS Day 2025 : உஷாரோ.. உஷாரு..! சாதாரணமாக தெரியும் 'எய்ட்ஸின்' ஆரம்ப அறிகுறிகள்.. அலட்சியம் வேண்டாம்
World AIDS Day 2025 : உஷாரோ.. உஷாரு..! சாதாரணமாக தெரியும் 'எய்ட்ஸின்' ஆரம்ப அறிகுறிகள்.. அலட்சியம் வேண்டாம்
இன்று உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. " தடைகளைத் தாண்டி எய்ட்ஸ் மறுமொழியை மாற்றுதல்" என்பது இந்த ஆண்டு எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் ஆகும். இந்த நோய் உயிருக்கு ஆபத்தான மிகவும் கொடிய நோய் என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வு கொடுக்கவே இந்த எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் சுமார் 40.8 மில்லியன் மக்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், எச்.ஐ.வியின் ஆரம்ப அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அது மேலும் பரவுவதற்கான வாய்ப்பை பூஜ்ஜியம் ஆகிவிடலாம். மேலும் இது தனி நபருக்கும், சமூகத்திற்கும் ரொம்பவே முக்கியமானது. ஆனால் பலர் இதை செய்ய தவறு விடுகிறார்கள். எனவே, எச்ஐவி தொற்றுக்கான பொதுவான ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எச்ஐவியின் ஆரம்பகால அறிகுறிகள் :
- அடிக்கடி காய்ச்சல் வருவதை அலட்சியம் செய்யக் கூடாது. உடலில் அதிகமாக குளிர்தல், காய்ச்சல் வருவதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- நோயெதிர்ப்பு சக்தி குறையும். இரவில் அதிகமாக வியர்த்தல் இதன் அறிகுறிதான்.
- மூட்டு வலி, தசைகளில் வலி. அடிக்கடி காய்ச்சல், உடல் வலிகள் ஏற்பட்டால் கவனிக்க வேண்டும்.
- உடல் சோர்வு, பலவீனமாக இருப்பது அல்லது எந்த காரணமும் இல்லாமல் அதிகப்படியான சோர்வு வரும்.
- தீவிரமான தொண்டை வலி
- கழுத்து, அக்குள், இடுப்பு பகுதியில் மென்மையான சுரப்பி போன்று வீங்கிய நிணநீர் முனைகள் இருப்பது.
- தோலின் அரிப்பு, உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்படுதல்.
- தலைவலி, குமட்டல், தொடர் வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் அல்லது நரம்பியல் அசெளகரியம் போன்றவை.
எச்ஐவி-யின் ஆரம்ப பரிசோதனை என்பது மருத்துவ மற்றும் பொது சுகாதார முன்னுரிமை. ஆகவே உங்களுக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனே எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த நோய் ஏற்பட்ட பின்னர் முறையான சிகிச்சையும், ஆரோக்கியமான உணவு முறையும் இருந்தால் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். அதனால் நோயின் தீவிரம் அதிகரிக்கும் முன் சோதனை செய்து கண்டறிவது அவசியம். அரசு மருத்துவமனைகளிலேயே இதற்கான சோதனைகளும், சிகிச்சையும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

