Mouth Ulcers: கோடையில் வாய்ப் புண் அதிகமாக வருவது ஏன்? காரணங்களும் தடுக்கும் வழிகளும்!
கோடையில் வெயில் மற்றும் வியர்வையால் வாய்ப்புண் அடிக்கடி வரும். நாக்கு, உதடு, ஈறுகளில் ஏற்படும் இப்பிரச்சனை பேசவும் சாப்பிடவும் சிரமத்தை தரும். 2 வாரங்களில் இது தானாகவே குணமாகும் என்றாலும், இது வருவதற்கான காரணத்தை அறிந்தால் எளிதில் தப்பிக்கலாம்.

நீர்ச்சத்து குறைபாடு :
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வேகமாக குறைகிறது. இதனால் வாய் வறண்டு போகிறது. உமிழ்நீர் (Saliva) குறையும் போது, வாயின் உள்பகுதி எளிதில் பாதிப்படைந்து புண்கள் உருவாகின்றன.
உணவுப் பழக்கவழக்கங்கள்:
கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காக காரமான, மசாலா நிறைந்த உணவுகளையோ அல்லது அதிக அமிலத்தன்மை (Acidic) கொண்ட பழங்கள் மற்றும் குளிர்பானங்களையோ உட்கொள்ளும்போது, அவை வாயின் மென்மையான உள்பகுதியை எரிச்சலடையச் செய்து புண்ணாக மாறுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு:
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் பி12 (Vitamin B12) போன்ற சத்துக்கள் குறையும் போது வாய்ப் புண்கள் அடிக்கடி தோன்றும். வெயில் காலத்தில் சரியான உணவை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
வாய் பகுதி காயங்கள்:
வேகமாகப் பல் துலக்கும்போது ஈறுகளில் படும் காயம் அல்லது தற்செயலாகக் கன்னத்தின் உள்பகுதியைக் கடித்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் புண்கள், கோடை வெப்பத்தால் இன்னும் தீவிரமடையக்கூடும்.
தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்:
வெப்பத்தின் காரணமாக இரவில் சரியாகத் தூங்க முடியாமல் போவது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். போதிய ஓய்வு இல்லாதபோது, உடலில் ஏற்படும் அழற்சி (Inflammation) காரணமாக வாய்ப் புண்கள் குணமாக அதிக நாட்கள் எடுக்கும்.
வாய் புண்ணைத் தடுக்கும் எளிய வழிமுறைகள்:
அதிகமாக தண்ணீர் குடியுங்கள்: தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது வாயை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். நீர்ச்சத்து மிகுந்த இளநீர், மோர் போன்றவற்றை அருந்தலாம்.
சீரான உணவுமுறை: காரமான, புளிப்பான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்தும் வைட்டமின்களும் நிறைந்த கீரைகள், பழங்கள் மற்றும் நவதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மென்மையான பிரஷ் பயன்படுத்துங்கள்: பற்களைத் துலக்கும்போது மென்மையான இழைகளைக் கொண்ட (Soft-bristle) பிரஷ்களைப் பயன்படுத்துங்கள். வாய் பகுதியை சுத்தமாக வைத்திருக்க தினமும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
நன்றாகத் தூங்குங்கள்: உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள தடையற்ற தூக்கம் அவசியம். எனவே, தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முயற்சி செய்யுங்கள்.

