- Home
- உடல்நலம்
- West nile virus: கொசுக்கடியால் உயிர் போகும் அபாயம்.. உலக நாடுகளுக்கு வந்த அடுத்த தலைவலி.. அலறவிடும் புது வைரஸ்
West nile virus: கொசுக்கடியால் உயிர் போகும் அபாயம்.. உலக நாடுகளுக்கு வந்த அடுத்த தலைவலி.. அலறவிடும் புது வைரஸ்
ஐரோப்பிய நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. வெஸ்ட் நைல் என்றால் என்ன, அதன் அபாயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ்
கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவில் பல நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் மட்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எட்டுக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நாடுகளில் கோடைக் காலத்தில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் பொழுது இந்த பாதிப்பு தீவிரமடைகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பாவின் பல நாடுகள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் இது பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் பரவும் விதம் மற்றும் ஆபத்துகள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
வெஸ்ட் நைல் வைரஸ் எப்படி பரவுகிறது?
வெஸ்ட் நைல் என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது 1937 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் வெஸ்ட் நைல் என்ற மாவட்டத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. எனவே இதற்கு வெஸ்ட் நைல் வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான். வைரஸ் பரவலுக்கு பறவைகளுக்கும், கொசுக்களுக்கும் இடையிலான ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது. இந்த வைரஸ் பொதுவாக பறவைகளின் உடல்களில் காணப்படும். காக்கைகள் போன்ற பறவைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பறவைகளை கொசுக்கள் கடிக்கும் பொழுது இந்த வைரஸ் கொசுக்களுக்கு பரவுகிறது.
வெஸ்ட் நைல் வைரஸின் அறிகுறிகள்
வைரஸ் பாதித்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் பொழுது அந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இது மனிதர்களின் இருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது. ஆனால் மிக அரிதாக பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் மற்றும் உறுப்பு தானங்கள் மூலமாகவும், கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைகளுக்கும் பரவுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் ஒருவரால் இன்னொருவருக்கு தொற்றுவதில்லை. அது வைரஸ் பாதித்த கொசுக்கள் மூலம் மட்டுமே பரவுகிறது. இந்த வைரஸ் ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலானோருக்கு (80%) எந்த அறிகுறிகளும் தெரியாது. சில சமயங்களில் காய்ச்சல் அல்லது சாதாரண நோய் போலவே தோன்றும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிலருக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்படும். இது நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்
கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, மயக்கம், நினைவாற்றல் இழப்பு, வலிப்பு, நடுக்கம், பக்கவாதம், கோமா போன்ற சில கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த கடுமையான அறிகுறிகள் பெரும்பாலும் மூளை காய்ச்சல் அல்லது மூளை சவ்வு அலர்ஜி போன்ற தீவிரமான நோய்களாக மாறி உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் சொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், எச்ஐவி நோயாளிகள், புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் இந்த வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.
தடுப்பு முறைகள் என்ன?
இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. அறிகுறிகளை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள நீர்த் தொட்டிகள், பாத்திரங்கள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு கடிக்காமல் இருப்பதற்கு உடல் முழுவதும் மறையும் வண்ணம் நீண்ட கை கொண்ட ஆடைகள், கால் சட்டைகளை அணியலாம். கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு பயணம் செல்லும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.