- Home
- உடல்நலம்
- Weight loss : உஷார்.! எடை குறைப்பு மருந்துகளால் பார்வை பறிபோகும் அபாயம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை
Weight loss : உஷார்.! எடை குறைப்பு மருந்துகளால் பார்வை பறிபோகும் அபாயம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை
உடல் எடை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளால் கண் பார்வை பறிபோகும் அபாயம் இருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Weight loss drugs may cause vision loss
உலக அளவில் உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் பருமனானது நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், மாரடைப்பு, பக்கவாதம் என பல நோய்களை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு தரப்பினர் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் முயற்சி செய்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து அறுவை சிகிச்சைகள், ஊசிகள், மாத்திரைகள் என மருத்துவ ரீதியிலான உதவியை நாடி வருகின்றனர். அப்படி விரைவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்காக சமீபத்தில் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
எடை குறைப்பு மருந்துகளால் பக்க விளைவுகள்
உடல் எடையை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மருந்துகள் மாத்திரை வடிவிலோ அல்லது ஊசி வடிவிலோ விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டால் பார்வையை இழக்க நேரிடும் என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. இது குறித்து குழந்தைகள் நல நிபுணரும் உணவு ஆலோசகர்மான மருத்துவர் அருண்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கி உள்ளார். அதில் அவர், “உடல் எடை குறைப்பு மருந்தை ஊசியாக வாரம் ஒரு முறை எடுத்தாலோ அல்லது மாத்திரையாக எடுத்தாலோ அது மறைமுகமாக பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவலாம். இதன் காரணமாக மூன்று மாதத்தில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்கலாம்” என்று கூறியுள்ளார்.
அதிக விலை கொடுத்து வாங்கப்படும் ரிஸ்க்
ஆனால் பசியை அதிகமாக கட்டுப்படுத்துவதால் வயிறு எப்போதும் நிரம்பி இருப்பது போன்ற ஒரு அசௌகரியம் ஏற்படுவதாகவும், வாந்தி, குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுதாகவும் நோயாளிகள் புகார் கூறியுள்ளனர். இந்த மருந்தை நிறுத்திவிட்டால் மீண்டும் உடல் எடை ஏற ஆரம்பித்து விடும். இந்த மருந்தின் விலை சற்று அதிகமே. இந்தியாவில் இந்த மருந்தை ஒரு மாதம் எடுப்பதற்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஆகலாம். ஆனால் மருந்து எடுப்பதை நிறுத்திவிட்டால் உடல் எடை மீண்டும் கணிசமாக அதிகரித்து விடும். இந்த மருந்தை அமெரிக்காவில் உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வசதியானவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
பார்வை இழப்பை ஏற்படுத்தும் எடை குறைப்பு மருந்துகள்?
ஆனால் இந்த மருந்தை உட்கொண்டால் பார்வை கோளாறுகள் ஏற்படும். சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில் எடை இழப்பு மருந்து எடுப்பவர்களுக்கு கண்களில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த மருந்தை எடுத்தால் NAION என்கிற பார்வை நரம்புகளில் சேதம் ஏற்படலாம். இதனால் கண் பார்வை திடீரென்று குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக டாக்டர் அருண் குமார் கூறியுள்ளார். மேலும் சர்க்கரை நோயால் டயாபட்டிக் ரொட்டினோபதி என்கிற கண்களில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மருந்தை எடுக்கும் பொழுது தற்காலிகமாக டயாபட்டிக் ரெட்டினோபதி பிரச்சனை மேலும் சேதமடையலாம் என்றும், இதன் அபாயம் மருந்தை எடுக்காதவர்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார்.
ஆரோக்கியமான முறையில் எடையை குறையுங்கள்
மேலும் அவர் கூறியதாவது, உங்கள் உணவுப் பழக்கத்திலிருந்து மாவுச்சத்தை குறைத்தாலே உடல் எடை நன்கு குறைவதை காணலாம். முறையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். இதை விடுத்து பணம் கொடுத்து இதுபோன்ற சவால்களை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் மிக எளிமையான டயட் முறைகளையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள். எடையை குறைக்க இது போன்ற குறுக்கு வழியை தேடாதீர்கள். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் பயணத்தை தொடங்குங்கள். இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க முடியும்” என்று அவர் கூறினார்.
எப்படி உடல் எடையைக் குறைப்பது?
இந்த எடை குறைப்பு மருந்தை வாங்கி பயன்படுத்த நீங்கள் நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டு சரியான வழியை பின்பற்றுங்கள். தினமும் காலை, மாலை என இரு வேளையானது அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடற்பயிற்சி செய்யப் பழகுங்கள். யோகாசனம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். ஜங்க் ஃபுட்களை கைவிட்டு விடுங்கள். எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளை சாப்பிடாமல் ஆவியில் வேகவைத்த உணவுகளை உண்ண தொடங்குங்கள். குறிப்பாக மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும், பால் சம்பந்தப்பட்ட உணவுகளை குறைத்தாலே உடல் எடை எளிதாக குறையும். எனவே இது போன்ற மருந்துகளில் நம்பிக்கை கொள்ளாமல் உங்களை முதலில் நம்பி உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்குங்கள்.