- Home
- உடல்நலம்
- Urine Eye Wash Viral Video : சிறுநீரில் கண்களை கழுவிய இன்ஸ்டா பிரபலம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
Urine Eye Wash Viral Video : சிறுநீரில் கண்களை கழுவிய இன்ஸ்டா பிரபலம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
புனேவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சிறுநீரைக் கொண்டு கண்கழுவி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பல மருத்துவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Urine Eye Wash Viral Video
சமூக வலைதளங்களில் காலை முதலே வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் புனைவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கண்களை சிறுநீரால் கழுவி அதனால் நன்மைகள் ஏற்படுவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நுபுர் பிட்டி என்ற அந்த பெண்மணி, தன்னை சுகாதாரப் பயிற்சியாளர் என்று கூறிக் கொள்கிறார். மேலும் சிறுநீர் இயற்கையின் சொந்த மருந்து என்றும், கண்கள் வறட்சி, சிவத்தல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த முறை நல்லது என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிறுநீரில் இருக்கும் ஆபத்துக்கள்
சிறுநீர் என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் ஆகியவற்றைக் கொண்ட மனிதக் கழிவாகும் இவற்றைக் கொண்டு கண்களை கழுவும் போது கண்களில் கடுமையான நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது கண் இமை அலர்ஜி, கார்னியா புண்கள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிறுநீரில் உள்ள அம்மோனியா, யூரியா மற்றும் பிற கழிவுப் பொருட்கள் கண்களை கடுமையாக எரிச்சலூட்டும். இதனால் கண்கள் சிவத்தல், வலி, அலர்ஜி, கண் பார்வை பாதிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுநீரில் உள்ள pH இன் அளவு நபருக்கு நபர் மாறுபடும். இது கண்களின் மென்மையான திசுக்களுக்கு வேதியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி கார்னியாவை கடுமையாக சேதப்படுத்தலாம். தீவிரமான நோய்த் தொற்றுகள் அல்லது நிரந்தர பார்வை இழப்புக்கும் இது வழிவகுக்கலாம்.
மருத்துவர்களிடம் எழுந்த கண்டனம்
கண்களை சிறுநீர் கொண்டு கழுவுவதால் நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இது ஒரு தவறான மற்றும் அபாயகரமான நம்பிக்கை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் இது போன்ற அபாயகரமான வழக்கங்கள் அல்லது சிகிச்சைக்குள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஏதாவது கண்களில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமே தீர்வு காண வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மருத்துவர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அந்த வீடியோவை அந்தப் பெண்மணி சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி உள்ளார்.
கண்களை பாதுகாக்கும் முறை
கண்கள் மிகவும் சென்சிடிவ் ஆன ஒரு உறுப்பாகும். அதை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். கண்களில் தூசி விழுந்தாலோ அல்லது எரிச்சல் ஏற்பட்டாலோ சுத்தமான நீர் கொண்டு கழுவ வேண்டும். கண் எரிச்சல் அல்லது வறட்சி ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கைகளை நன்கு கழுவிய பின்னரே தொட வேண்டும். தூசி அல்லது சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க கண் கண்ணாடிகள் அல்லது சன் கிளாஸ் அணிந்து செல்லலாம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிகமாக தூசி படிவதாக நினைத்தால் அதற்காக பிரத்யேகமாக விற்கப்படும் பாதுகாப்பு கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்ளலாம். கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதை முயற்சி செய்யக்கூடாது
சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற தவறான மருத்துவ முறைகளை கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்முறைகளை யாரும் வீட்டில் பரிசோதித்து பார்க்க கூடாது. உடல் நலனில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து அதன் பின்னரே மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் மேற்கொள்ளுதல், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து மருத்துவ மேற்கொள்ளுதல் ஆகியவற்றை அறவே கைவிடுதல் வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.