அளவுக்கு மீறினால் மஞ்சளும் விஷம் தான்! குழம்புல எவ்வளவு யூஸ் பண்ணணும் தெரியுமா?
Turmeric Side Effects : மஞ்சளை அதிகமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எவ்வளவு மஞ்சள் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

அளவுக்கு மீறினால் மஞ்சளும் விஷம் தான்! குழம்புல எவ்வளவு யூஸ் பண்ணணும் தெரியுமா?
மஞ்சள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இருக்கும் குர்குமின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மஞ்சள் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே அதை குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மஞ்சளின் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரியான தீங்கு விளைவிக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
செரிமான பிரச்சனைகள்:
மஞ்சள் பித்த உற்பத்தியை அதிகரிக்கவும், வாயு அமில அளவை அதிகரிக்கவும் செய்யும். ஆயுர்வேதத்தின் படி, அதிகப்படியான மஞ்சள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவது செரிமானத்தை மேம்படுத்தினாலும், அதன் அதிகப்படியான நுகர்வு செரிமான அமைப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது பிற இரைப்பை குடல் பிரச்சனைகள் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும்.
சிறுநீரக கற்கள்:
மஞ்சளில் பல்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் இயற்கை பொருளான ஆக்சலேட்டுகள் இருக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தின் படி, இதை அதிகமாக உட்கொள்ளும்போது ஆக்சிலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் ஆக்சலைட் படிகங்களை உருவாக்கி சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
இரும்புச்சத்து குறைபாடு:
மஞ்சள் இருக்கும் குர்குமின் உடலில் இரும்பு உறிஞ்சதில் தலையிடும். ஒரு ஆய்வின்படி மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அதன் அதிகப்படியான நுகர்வானது இரும்பு உறிஞ்சுதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில நபர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக அளவில் அல்லது நீண்ட காலத்திற்கு உட்கொள்ளும்போது இந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தலைவலி, தலை சுற்றல்;
மஞ்சளில் குர்குமின் அதிக அளவில் உள்ளதால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தலைவலி மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: தலைமுடிக்கு மஞ்சள் செய்யும் நன்மை.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
ஒவ்வாமை மற்றும் சரும பிரச்சனைகள்:
சிலருக்கு மஞ்சள் ஒவ்வாமையாக இருக்கலாம். அதாவது சருமத்தில் அரிப்பு, சொறி அல்லது வீக்கம் போன்றவை. அதிகப்படியான மஞ்சள் உட்கொள்வது சருமத்தை உணர்திறன் மிக்கதாக மாற்றிவிடும்.
கல்லீரல் பாதிப்பு:
மஞ்சளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் கல்லீரல் நொதிகளை அதிகரிப்பதன் மூலம் கல்லீரலில் செயல்பாடு மோசமாக பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் டீடாக்ஸ்! மஞ்சள், சீரகத்தால் இத்தனை நன்மைகளா!
இரத்தம் மெலிவு:
மஞ்சளில் இருக்கும் குருகுமின் என்ற சேர்மம் ரத்தம் மெலிவு மருந்தாக செயல்படுகிறது. காயம் ஏற்பட்டால் அதிகமாக மஞ்சள் உட்கொள்ளும்போது இரத்தப்போக்கு பிரச்சினையை அதிகரிக்கும்.
வயிற்று எரிச்சல்;
அதிகமாக மஞ்சள் உட்கொள்ளும்போது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் இது செரிமான அமைப்பின் தொந்தரவு செய்யும். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும்.
எவ்வளவு மஞ்சள் எடுத்துக் கொள்ள வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 500 முதல் 2000 மில்லி கிராம் மஞ்சள் பயன்படுத்தலாம்.