Shih Tzu: ஷிட்சு நாய் வளர்க்கிறீங்களா? அப்போ இதெல்லாம் கட்டாயம் பண்ணணும்!
Shih Tzu: சிட்சு நாயை வளர்க்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? அதை தினசரி Grooming, உணவு, கண்கள், பற்கள், நகங்கள் மற்றும் வெயிலில் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பராமரிப்பு குறிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஷிட்சு நாய்
ஷிட்சு (Shih Tzu) நாய்கள் ரொம்பவே பாசமானவை. அதனாலதான் பலரும் இதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கிறாங்க. ஆனால், இந்த நாயை நீண்ட நேரம் தனியாக கட்டிப்போட்டு வைக்கக்கூடாது. அப்படி தனியாக விட்டால் சில நாய்களுக்கு மன அழுத்தம், தவிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமாம். கேட்கவே ஆச்சரியமா இருக்குல?
ஷிட்சு நாயை வளர்க்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. அதோட முடி பராமரிப்பு, உணவு, உடற்பயிற்சி, கண்கள், பற்கள், காதுகள் என பல விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தணும். அப்படி என்னென்ன செய்யணும் தெரியுமா?
தினசரி முடி பராமரிப்பு
அமெரிக்கன் கெனல் கிளப் (American Kennel Club - AKC) மற்றும் கால்நடை மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, ஷிட்சு நாயை வளர்க்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
ஷிட்சுவின் முடி நீளமாக இருப்பதால் சீக்கிரம் சிக்கிக்கொள்ளும். அவற்றை நாம் கவனிக்காமல் இருந்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டி கட்டியாக மாறிவிடும். இதனால், தினமும் மென்மையான பிரஷ் மூலம் முடியை சீவி விட வேண்டும். குறிப்பாக முகம், மீசை மற்றும் தலையில் உள்ள முடியை கவனமாக பராமரிக்கணும். முடி ரொம்ப சிக்கினா, குட்டையா “puppy cut” வெட்டி பராமரிப்பது ஈசியாக இருக்கும்.
கண்களுக்கு கூடுதல் கவனம்
ஷிட்சு நாய்க்கு பெரிய கண்களும், குட்டி மூக்கும் இருப்பதால், கண்களைச் சுற்றியுள்ள முடிகள் எளிதில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் தினமும் மென்மையான ஈரத்துணியால் கண்களைச் சுற்றி துடைப்பது நல்லது. கண்ணுக்கு உறுத்தாத அளவுக்கு முகத்தைச் சுற்றியுள்ள முடிகளையும் சீராக வெட்டி வைக்கணும். கண்களில் சிவப்பு அல்லது நீர் வடிந்தால், கால்நடை மருத்துவரிடம் காட்டுவது நல்லது.
ஏசிக்குள்ளேதான் இருப்பாராம்
ஷிட்சு நாய்களுக்கு வெப்பத்தை சமாளிப்பது சற்று கடினம். அதனால், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மற்ற நாய்களைப் போல வெளியே கட்டிப்போட்டு வளர்க்காமல், வீட்டுக்குள் குளிர்ச்சியான மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பராமரிப்பது நல்லது.
உணவு மற்றும் உடற்பயிற்சி
நீங்கள் வளர்க்கும் ஷிட்சுவின் வயது, எடை மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்ப உணவு கொடுக்க வேண்டும். அதிகமாக உணவு கொடுத்தால் உடல் எடை கூடிவிடும். எப்போதும் சுத்தமான தண்ணீர் அதன் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வகை கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை. தினமும் சிறிது நடைப்பயிற்சி மற்றும் வீட்டுக்குள்ளேயே விளையாடுவது அதன் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு போதுமானதாகும்.
பற்கள், காதுகள் மற்றும் நகங்கள்
ஷிட்சுக்கு சிறிய வாய் என்பதால் பற்களில் சீக்கிரம் கறை (Plaque) படியும். வாரத்திற்கு இருமுறை நாய்களுக்கான பிரத்யேக பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டும். காதுகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தமாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஏதேனும் அசாதாரண நாற்றம் அடித்தால் கால்நடை மருத்துவரிடம் காட்டுவது நல்லது.
அதேபோல், நகங்களையும், கால்களுக்கு இடையில் வளரும் முடிகளையும் முறையாக வெட்டி பராமரிக்க வேண்டும். மாதத்திற்கு 2 அல்லது 3 முறை நாய்களுக்கான Shampoo பயன்படுத்தி நாயை குளிப்பாட்டி, அதன் முடியை நன்றாக உலர்த்த வேண்டும்.
மருத்துவர் பரிசோதனை
ஷிட்சுவுக்கு தேவையான தடுப்பூசிகள், ஒட்டுண்ணி தடுப்பு, பல் பரிசோதனை போன்றவற்றை சரியான நேரத்தில் செய்யனும். திடீரென மூச்சுத்திணறல், சோர்வு, கண்களில் பிரச்சனை அல்லது உணவு, தண்ணீர் சாப்பிடுவது குறைவது போன்ற மாற்றங்கள் இருந்தால், தாமதிக்காமல் கால்நடை மருத்துவரிடம் செல்வது நல்லது.
ஷிட்சு மனிதர்களுடன் பழக விரும்பும் நாய். நீண்ட நேரம் தனியாக இருப்பது சில நாய்களில் மன அழுத்தம் அல்லது பிரிவுத் தவிப்பு ஏற்படுத்தலாம் என கால்நடை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

