Water Diet : எச்சரிக்கை..இந்த டயட் மட்டும் வேண்டாம்.. உயிரே போகும் அபாயம் உள்ளது.!
உடல் குறைப்புக்காக பின்பற்றப்படும் ஒரு டயட் முறையால் உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Water Diet Dangerous in Tamil
இன்று உடல் பருமன் என்பது உலகளாவிய பிரச்சனையாக மாறிவிட்டது. பலரும் உடல் குறைப்புக்காக பல வகையான டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். அதில் ஒரு வகை தான் வாட்டர் டயட் வாட்டர் டயட். வாட்டர் டயட் என்பது வேறு எந்த திட உணவுகளையோ, பானங்களையோ உட்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பொதுவாக 24 மணி நேர முதல் சில நாட்கள் வரை தண்ணீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருக்கும் முறையாகும். இது உடல் எடையை குறைப்பதற்கும், உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுவதற்கும் சிறந்த வழிமுறையாக சிலர் கருதுகின்றனர். ஆனால் இந்த டயட் இருந்தால் உயிர் பறிபோகும் அபாயம் இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வாட்டர் டயட் என்றால் என்ன?
தண்ணீரை மட்டும் அருந்தி டயட் இருப்பது என்பது உடலுக்கு மோசமான பின் விளைவுகளை தரும். தண்ணீர் மட்டும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் கிடைக்காது. இதன் காரணமாக கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டு உள் உறுப்புகளில் செயலிழக்கத் துவங்கும். உடலில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான எலக்ட்ரோலைட்டுகள் கிடைக்காமல் போகலாம். இது நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதன் காரணமாக ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, வலிப்பு மற்றும் கோமா போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்படலாம்.
உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படலாம்
கார்போஹைட்ரேட் மூலம் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய குளுக்கோஸ்கள் கிடைக்கும். ஆனால் வெறும் தண்ணீர் மட்டும் அருந்துவதால் இந்த குளுக்கோஸ் கிடைக்காமல் சோர்வு, தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆற்றலுக்காக கொழுப்பிற்கு பதிலாக தசைகளில் இருக்கும் புரதத்தை உடைக்க ஆரம்பிக்கலாம். இது தசை இழப்பை ஏற்படுத்தி உடலை வெகுவாக வலுவிழக்க செய்துவிடும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் போதிய ஊட்டச்சத்து இல்லாததால் பாதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் சிறுநீரகங்களால் அதிக தண்ணீரை வடிகட்ட முடியாமல் நீர் நச்சுத்தன்மை அல்லது ஹைபோநெட்ரீமியா போன்ற நிலைகள் ஏற்படலாம். இதன் காரணமாக ரத்தத்தில் சோடியம் அளவு மிகவும் குறைந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
எந்த டயட்டை பின்பற்ற வேண்டும்?
நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு வாட்டர் டயட் மேற்கொண்டால் நிலைமை இன்னும் மோசமாகலாம். உடல் எடையை குறைப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் ஆரோக்கியமான வழிகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், கார்போஹைட்ரேட் ஆகியவற்றை கொண்ட சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டும். தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது ஆகியவற்றின் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.
மருத்துவ ஆலோசனை தேவை
வாட்டர் டயட் என்பது ஒரு முட்டாள்தனமான டயட் முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் பலரும் இதுபோன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத டயட் முறைகளை பலருக்கும் பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால் மற்ற டயட் முறைகளை விட வாட்டர் டயட் என்பது உயிரையே பறிக்கும் அளவிற்கு ஒரு மோசமான டயட் முறையாகும். உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகி அவர்களின் ஆலோசனையின் பெயரில் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்றுங்கள். சமூக வலைதளங்களை பார்த்து வாட்டர் டயட் போன்ற மோசமான டயர் முறைகளை பின்பற்றி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.