- Home
- உடல்நலம்
- Medical Checkup for Women : 50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
Medical Checkup for Women : 50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மார்பகப் புற்றுநோய்
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மிக பொதுவானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் ஒரு முக்கியமான பரிசோதனை மாமோகிராம். இதை 50 வயதை நெருங்கிய பெண்கள் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் வரலாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அடிக்கடி இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் பரிசோதனை
கர்ப்பபை வாய்ப் புற்றுநோயை கண்டறிய பாப் ஸ்மியர் மற்றும் ஹெச்பிவி பரிசோதனைகள் உதவுகின்றன. 65 வயது வரை பாப் ஸ்மியர் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சீரான முடிவுகள் இருந்தால் சில சமயங்களில் இந்த பரிசோதனையை மருத்துவர்கள் நிறுத்த பரிந்துரைக்கலாம். ஹெச்பிவி பரிசோதனையை பாப் ஸ்மியருடன் இணைத்து செய்யப்படலாம்.
எலும்பு அடர்த்தி பரிசோதனை
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைவதால் எலும்புகள் பலவீனமடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எலும்பு அடர்த்தியை அளவீடு செய்ய DEXA ஸ்கேன் உதவுகிறது. எலும்பு பலவீனத்தை முன்கூட்டியே கண்டறிந்தால் சிகிச்சை அளிக்கலாம். பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தால் 50 வயதிலேயே செய்து கொள்ளலாம்.
குடல் புற்றுநோய் பரிசோதனை
50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கலாம். கொலனோஸ்கோபி அல்லது சிக்மாய்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகள் மூலம் குடலில் உள்ள கட்டிகள் அல்லது பிற அசாதாரண வளர்ச்சிகளை கண்டறியலாம். பொதுவாக பத்து வருடங்களுக்கு ஒருமுறை கொலனோஸ்கோபி பரிந்துரைக்கப்படுகிறது.
கண் பரிசோதனை
வயது முதிர்ந்த பெண்களுக்கு கண் புரை (Cataract), கண்ணழுத்த நோய் (Glaucoma), வயது மூப்பின் காரணமாக வரும் மாகுலர் சிதைவு (Age related Macular Degeneration - AMD) போன்ற கண் நோய்கள் ஏற்படலாம். வருடத்திற்கு ஒரு முறையாவது முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
சருமப் புற்றுநோய் மற்றும் பிற பரிசோதனைகள்
உடலில் திடீரென தோன்றும் அசாதாரண புள்ளிகள், மச்சங்கள் ஆகியவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் வருடத்திற்கு ஒருமுறையாவது தோல் நோய் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது மட்டுமல்லாமல் வாய் வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க பல் பரிசோதனையும், வழக்கமான உடல் பரிசோதனைகளான நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, தைராய்டு செயல்பாடு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ ஆலோசனை தேவை
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்கள் அடிப்படையிலானவை மட்டுமே. உங்கள் தனிப்பட்ட நலம், குடும்ப வரலாறு, ஆபத்து காரணிகள் அடிப்படையில் எந்தெந்த பரிசோதனைகள் தேவை? எப்போது செய்ய வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.