- Home
- உடல்நலம்
- Kajal for Babies: என்னங்க சொல்றீங்க? குழந்தைகளுக்கு கண் மை போடக்கூடாதா? மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?
Kajal for Babies: என்னங்க சொல்றீங்க? குழந்தைகளுக்கு கண் மை போடக்கூடாதா? மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?
குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம். ஆனால் இது பாதுகாப்பானதா என்பதற்கு மருத்துவர்கள் அளித்த விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு கண் மை வைக்கலாமா?
இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு கண் மை வைப்பது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை. குழந்தைகள் பிறந்தவுடன் வீட்டில் இருக்கும் பாட்டி அல்லது பெரியவர்கள் வீட்டிலேயே கண் மை தயாரிக்கின்றனர். ஆனால் தற்போது பலரும் சந்தைகளில் விற்பனையாகும் கண் மைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல கண் மருத்துவர் வைஷாலி விளக்கங்களை அளித்திருக்கிறார். அதில் அவர் குழந்தைகளின் கண்கள் மென்மையானவை என்பதால், கண் மை பயன்படுத்தக் கூடாது என்றும், மேலும் கண் மை பயன்படுத்துவதால் அவர்களின் கண்கள் பெரிதாகின்றன என்று நினைப்பது மிகப்பெரிய தவறு என்று கூறியிருக்கிறார்.
இரசாயனம் கலந்த கண் மைகளால் ஏற்படும் ஆபத்து
சந்தைகளில் விற்கப்படும் பல கண் மை தயாரிப்புகளில் ஈயம், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த ரசாயனங்கள் கண்களில் எரிச்சல், அரிப்பு, கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். கண் மையில் இருக்கும் ரசாயனங்கள் பார்வை நரம்புகளை பாதித்து எதிர்காலத்தில் மங்கலான பார்வை அல்லது நிரந்தர பார்வை இழப்புக்கு கூட வழிவகுக்கலாம். சில குழந்தைகளுக்கு கண் மையில் உள்ள ரசாயனங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி கண்கள் சிவந்து போதல், கண்ணில் எரிச்சல், வீக்கம், கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கண் மைகளில் கலக்கப்படும் ஈயம் குழந்தைகளின் உடலால் உறிஞ்சப்பட்டு ஈய நச்சுத்தன்மை, குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலம் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
கண் மை வைப்பதால் கண்கள் பெரிதாகாது
இரசாயனம் கலந்த கண் மை யானது கண்ணீர் பைக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி கண்களில் இருந்து கண்ணீர் வெளியேற முடியாமல் செய்து நோய் தொற்றுக்கு வழி வகுக்கலாம். கண் மை இடுவதால் கண்கள் பெரிதாகும் என்பது முற்றிலும் பொய்யானது. கண்களின் அமைப்பு என்பது பெற்றோர் அல்லது மரபணுவை சார்ந்தது. பெற்றோருக்கு பெரிய கண்கள் இருந்தால் குழந்தைகளுக்கும் கண்கள் பெரியதாக இருக்கும். கண்ணிற்கு மை தடவுவது அல்லது வேறு ஏதேனும் செய்வதால் கண்கள் பெரிதாகி விடாது. மேலும் சிறு குழந்தைகளின் கண்கள் மென்மையானவை. அவற்றை நம் கைவிரல்கள் கொண்டு தொடும்பொழுது வேறு எங்காவது அவர்களின் கண்ணில் பட்டால் அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கண் மை இடுவதை ஊக்குவிப்பதில்லை.
வீட்டில் தயாரித்த கண் மைகளை பயன்படுத்தலாம்
அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் போன்ற மருத்துவ அமைப்புகள் குழந்தைகளுக்கு கண் மை பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். கண் மை வைப்பதால் குழந்தைகளுக்கு கண்கள் பெரிதாகும் என்றோ, கண் திருஷ்டி வராது என்றோ கூறுவதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. குழந்தையின் கண்கள் மிகவும் மென்மையானது. எந்த விதமான ரசாயனங்களும் கண்களில் படாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். கண் மை வைப்பதை விட குழந்தையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதே அவசியம். இது பாரம்பரிய பழக்க வழக்கங்களாக இருந்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் முதன்மையானது. கண் மை வைப்பதை தவிர்ப்பதே பாதுகாப்பானது, வீட்டில் தயாரித்த அல்லது இரசாயனங்கள் இல்லாத பாதுகாப்பான கண் மைகளை வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.