- Home
- உடல்நலம்
- Dog: அடக்கடவுளே சாவு இப்படியா வரணும்? நாய் நக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த பெண்.. இதுதான் காரணமா?
Dog: அடக்கடவுளே சாவு இப்படியா வரணும்? நாய் நக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த பெண்.. இதுதான் காரணமா?
மனிதர்களை நாய் கடித்து, ரேபிஸ் தாக்கி உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெண் ஒருவர் நாய் நக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? இதன் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

நாய் நக்கியதால் மூதாட்டி மரணம்
செல்லப்பிராணிகளில் முதலிடம் பிடிப்பது நாய்கள் தான். பலரும் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை விரும்புகின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தங்களது உரிமையாளர்களை நக்குவது இயல்பான ஒரு விஷயம் தான் என்றாலும் இது உயிருக்கே ஆபத்தாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. நோர்ஃபோக்கில் உள்ள அடில்பரோவைச் சேர்ந்த 83 வயதான ஜூன் பாக்ஸ்டர் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு வந்த அவரது பேத்தி கெயிட்லான் என்பவரின் வளர்ப்பு நாய் அந்த காயத்தை நக்கி உள்ளது. தொடர்ந்து ஜூன் பாக்ஸ்டரின் உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காயத்தில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்கிற பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தனர்.
பாஸ்டுரெல்லா மல்டோசிடா பாக்டீரியா
பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா பொதுவாக விலங்குகளின் வாயிலும், சுவாசம் மண்டலத்திலும் காணப்படும் ஒரு நுண்ணுயிரி ஆகும். குறிப்பாக நாய்கள், பூனைகள், முயல்கள், கால்நடைகள் போன்ற வீட்டு விலங்குகளின் உமிழ் நீரில் அதிகம் இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து கடி, கீறல் அல்லது நாக்கினால் நக்குவது போன்ற செயல்முறைகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த பாக்டீரியாவால் பெரிய தொற்றுகள் ஏற்படுவதில்லை. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் அல்லது வேறு ஏதேனும் நோய் காரணமாக உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு இந்த பாக்டீரியா காரணமாக தீவிர தொற்றுகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு செப்சிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான தொற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஏற்கனவே சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் மற்றும் இதயப் பிரச்சினைகளுடன் போராடி வந்த ஜூன் பாக்ஸ்டர் இந்த பாக்டீரியா தாக்கியதன் காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, சில பாக்டீரியாக்கள் நாய்களின் வாயில் சாதாரணமாகவே இருக்கும். உங்கள் உடலில் காயம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாக்டீரியாக்கள் காயங்கள் வழியாக ஊடுருவி செப்டிக், திடீர் உறுப்பு செயலிழப்பு போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே முகம், கண்கள், மூக்கு, வாய் போன்ற சளி சவ்வுகள் உள்ள பகுதிகளை நாய்கள் நக்குதல் கூடாது. அவை மிகவும் உணர்வுள்ள ஊடுருவக் கூடிய இடங்களாகும். அதே போல் திறந்த காயங்களையும் நாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாக்டீரியாவால் ஏற்படும் விளைவுகள்
இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் கடுமையான வலி ஏற்படும். தொற்று ஏற்பட்ட இடம், தோல் மற்றும் கீழ் திசுக்களில் கடுமையான வீக்கம் உண்டாகும். சில சமயங்களில் பாக்டீரியா நுரையீரலை தாக்கி மூச்சுத்திணறல், இருமல், நெஞ்சு வலி, நிமோனியா உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவி செப்சிஸ் என்கிற தீவிரமான நிலையை கொண்டு வரும். இது உடல் உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுத்து உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம். இந்தத் தொற்றுக்கு பெரும்பாலும் ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படாத போது இந்தத் தொற்று அபாயகரமானதாக மாறலாம்.
அலட்சியம் கூடாது
விலங்குகளிடமிருந்து கடி அல்லது கீறல் ஏற்பட்டால் காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். வீக்கம் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நாய்கள் தங்களின் பாசத்தையும், மரியாதைக்கும் வெளிப்படுத்த நக்குவதை இயற்கையாக மேற்கொள்கின்றன. இந்த நடத்தை மூலம் நாய்கள் தங்களின் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் நாய்களின் வாய்களில் உள்ள பாக்டீரியாக்கள் உயிருக்கே உலை வைக்கலாம். எனவே என்ன செல்ல பிராணியாக இருந்தாலும் அவை நக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். சிறு அலட்சியம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.