வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடித்தால் இத்தனை நோய்கள் தீருமா?
தினமும் வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Health Benefits of Garlic Water on Empty Stomach
பூண்டு என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். பூண்டு இல்லாத இந்திய சமையலறையை பார்க்க முடியாது. இது நம்முடைய பாரம்பரிய மருத்துவத்திலும், நவீன ஆராய்ச்சியிலும் அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் சக்தி வாய்ந்த மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பூண்டு அதன் தனித்துவமான வாசனை, காரமான சுவை ஆகியவற்றையும் தாண்டி, அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன. தினமும் வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால் பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
பூண்டு தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த பானமாகும். பூண்டில் இருக்கும் அல்லிசின் (allicin) என்ற கூறு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கான சக்தியை அதிகரிக்கும்.
இதயம் ஆரோக்கியத்திற்கு!
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பூண்டு தண்ணீர் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அதாவது, ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் பூண்டில் உள்ளன. இதனால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும். இது தவிர உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க பூண்டு உதவுகின்றது. இதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயம் குறையும். ஆகவே தினமும் வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும் :
பூண்டு தண்ணீர் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதாவது பூண்டு குடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் குடல் இயக்கத்தை சீராக்கி அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனே நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால் செரிமான அமைப்பு சுத்திகரிக்கப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகின்றது.
எடையை கட்டுக்குள் வைக்கும் :
பூண்டு நீர் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றது. இந்த நீரானது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை கரைக்கும் செயல்முறை தூண்டவும் உதவுகிறது. இது தவிர பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகின்றது. ஆகவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பூண்டு தண்ணீர் சிறந்த தேர்வாக இருக்கும்.
சருமத்திற்கு நல்லது :
பூண்டில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் செல்களை ப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தவிர புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. பூண்டு நீர் சரும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையாக வைக்க உதவுகிறது.
மேலே சொன்ன ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற விரும்பினால் தினமும் காலையில் இரண்டு பல் பூண்டை நசுக்கி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். சில நாட்களிலேயே நல்ல பலனை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.